புதுடெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறியுள்ள அமெரிக்க – இந்திய ராஜதந்திர கூட்டாண்மை அமைப்பின் தலைவரும், சிஇஒ-வுமான (USISPF) முகேஷ் அஹி, இந்த பயணத்தின் போது புவிசார் அரசியல் சீரமைப்பு, வர்த்தக உறவு, தொழில்நுட்ப பரிமாற்றம், மற்றும் சட்டவிரோத குடியேற்றம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அஹி அளித்த பேட்டியின் போது கூறியதாவது: “இந்தப் பயணம் மிகவும் முக்கியமானது. இந்தப் பயணம் புவிசார் அரசியல் சீரமைப்பு தொடர்வதை உறுதி செய்யும். இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த பேச்சு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நிச்சயமாக சட்டவிரோத குடியேற்றம் குறித்து விவாதிக்கப்படும்.
இரண்டு நாடுகளின் பொருளாதர வளர்ச்சியை இன்னும் உயர்வுக்கு கொண்டு செல்வது போன்ற பொதுவான விஷயங்களுடன் பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்ப்பை துவக்கத்திலேயே சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என நான் கருதுகிறேன். அவர்கள் சில வகையான வர்த்தக கூட்டாண்மையை நோக்கி முன்னேறுவார்களா என்றால் நிச்சயமாக முன்னேறுவார்கள். வணிகம் பற்றியும் விவாதிப்பார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி, பிப்.12,13 ஆகிய தேதிகளில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பின்பு பிரதமர் மோடி முதல்முறையாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.” இவ்வாறு முகேஷ் அஹி தெரிவித்தார்.
முன்னதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை கூறுகையில், ” அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்ற மூன்று வாரத்துக்குள் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இந்திய அமெரிக்க கூட்டுறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருந்தார்.