Ind vs Eng: பும்ராவுக்கு என்ன ஆச்சு? பயிற்சியாளர் சொன்ன பதில்!

India vs England 2nd ODI: இந்தயா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைத்தானத்தில் நடைபெறுகிறது இப்போட்டி. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ரசிகர்கள் கண்டு களிக்க இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதனை கண்டு களித்தனர். 

இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சோ கோட்டாக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் விராட் கோலி உடல் தகுதி குறித்தும் காயத்தால் ஓய்வில் இருக்கும் பும்ரா குறித்து பேசி உள்ளார்.  

இது குறித்து அவர் பேசுகையில், விராட் கோலி முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார். அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவது உறுதி. கோலிக்கு பதில் யார் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த முடிவை தலைமை பயிற்சியாளரும் கேப்டனும் தான் எடுப்பார்கள். அதேநேரத்தில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கும் வகையில் மாற்றி அமைத்திருக்கின்றனர் என்றார். 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட்; தீபக் சாஹர் இல்லைனா என்ன? இந்த வீரர் சிஎஸ்கேவுக்கு விக்கெட்டை அள்ளி கொடுப்பார் போலயே!

ரோகித் 31 சதங்கள் அடித்தவர் என்பதை மறந்து விட வேண்டாம்

தொடர்ந்து பேசிய அவர், ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறுவதுபோல் தெரியவில்லை. அவர் கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 50 ரன்கள் அடித்திருக்கிறார். அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 31 சதங்களை அடித்திருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம். எல்லா வீரர்களும் சிறுதி காலம் தடுமாறுவார்கள். அது எனக்கு கவலை இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தடுமாறினார். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே ரோகித் சர்மா குறித்து எந்த கவலையும் இல்லை. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விரைவாக இரண்டு விக்கெட்களை இழந்தோம். ஆனால் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ரன்களை சேர்த்தனர். அணி வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடினார்கள். 

பும்ரா உடல் தகுதி குறித்து தெரியவில்லை

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி நன்றாக உள்ளது. அணியில் மாற்றம் ஏதும் இருக்குமா என்பதை கேப்டனும் பயிற்சியாளரும்தான் எடுப்பார்கள். முகமது சமியை பொறுத்தவரை முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி குறித்து எனக்கு தெரியவில்லை.  அதனை பிசியோ மருத்துவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் உள்ளது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? அல்லது இங்கிலாந்து அணி வென்று தொடரை தக்கவைத்துக்கொள்ளுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் இந்திய அணியில் விராட் கோலி இன்று விளையாடும் பட்சத்தில் எந்த வீரர்ரை வெளியேற்ற போகிறார்கள். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பதும் இன்று (பிப். 09) மதியம் தெரிந்துவிடும்.  

மேலும் படிங்க: “கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது” – கபில் தேவ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.