The Mehta Boys Review: 'பேசிக்கொள்ளாத மெய்யழகன்கள்' – எப்படியிருக்கிறது இந்த அப்பா – மகன் படம்?

தன்னம்பிக்கை இல்லாமல் தொழிலில் சிரமப்படும் ஆர்க்கிடெக்ட் அமேய் (அவினாஷ் திவாரி). அவரின் தாய் இறந்துவிட்டதாகச் செய்தியறிந்து சொந்த ஊருக்குச் செல்கிறார்.

வீட்டில் அப்பாவால் (போமன் இரானி) வெளியாள் போலவே நடத்தப்படும் அவர், அப்பாவுடனேயே இரண்டு நாட்கள் மும்பையில் தங்க வேண்டிய சூழல் உருவாகிறது. 

வீட்டைப் பிரிந்து மும்பையில் வசித்துவரும் அமேய்க்கு எழும் ‘தன் அப்பாவை ஒரு குழந்தையாக நடத்துவதா அல்லது வளர்ந்த மனிதராகவா?’ என்ற கேள்வி எழுகிறது. ஒருவருக்கொருவர் பாசாங்கான அன்பை வெளிப்படுத்திக்கொள்வது வீணானதாக அல்லது பொய்யானதாக் கருதும் இரண்டு ஆண்களுக்கும் இடையிலான உறவு அந்த இரண்டு நாட்களில் இன்னும் மோசமடைந்ததா அல்லது வலுபெற்றதா என்பதுதான் தி மேதா பாய்ஸின் கதை.

`3 இடியட்ஸ்’, `முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’ படங்களில் நடித்த போமன் இரானி இந்த படத்தை இயக்கியுள்ளார். 65 வயதில் அவர் இயக்கும் முதல் திரைப்படம். ஆனால் இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவத்தை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது. உதாரணமாக இடிந்து விழுந்த கூரையை தந்தையும் மகனும் பார்க்கும் காட்சியில், கேமரா கூரையை நோக்கி நகரும்போது தூரத்தில் ஒரு விளக்கு போடப்படும். இப்படி பார்வையாளர்களை ஒவ்வொரு காட்சியிலும் கனெக்டடாக வைத்திருந்தது. 

The Mehta Boys

சலிக்க வைக்காத எடிட்டிங், தேவையற்ற எதையுமே ஃப்ரேமில் காட்டாத கேமரா என தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றியவர்களால் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எமோஷனல் ட்ராமாவில் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டும்போதும், தனித்தனியே இருவரும் உடைகையிலும் காட்சியில் உப்பு சேர்ப்பதுபோல பொறுப்பாக சேர்க்கப்பட்டிருக்கிறது இசை.

இயக்குநரான போமன் இரானியே முதன்மையான தந்தை பாத்திரத்தில் நடித்துள்ளார். மனைவியின் இழப்பு, அவளில்லாமல் நினைத்தே பார்க்க முடியாத வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தயக்கம், மகனிடம் அலட்டிக்கொள்ளும் விதம் என பாத்திரத்திலேயே வாழ்ந்திருக்கிறார். கதையை தன் தோளில் தாங்கியிருக்கிறார் என சந்தேகமில்லாமல் கூறலாம். வலிகளை மறைத்துக்கொண்டு ‘கூலாக மனிதராகத் தோன்ற ஷிவ் மேதா எடுத்துக்கொள்ளும் சிரத்தை’யை மிக எளிதாகக் கடத்தியிருப்பார். அவரது பாடிலேங்குவேஜும், வசனங்களுக்கு இல்லாத இடத்தில் பேசும் கண்களும் சிறந்த நடிகரை வெளிக்கொண்டுவந்துள்ளன. ஒவ்வொரு காட்சியிலும் அந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையே 25 ஆண்டுகள் இருந்த உறவின் ஆழத்தை நம் கண்களால் பார்க்க முடியும். 

மகனாக நடித்திருக்கும் அவினாஷ் திவாரி, தொழில் வாழ்க்கையில் ‘நான் இன்னும் வளரவில்லை’ என்ற நம்பிக்கையின்மையையும் தந்தையிடம் ‘நான் ஒரு வளர்ந்த மனிதன்’ என நிரூபிக்கும் உறுதியையும் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மெளனங்களை அழகாகக் கையாண்டிருப்பார். ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு எமோஷன், ஒவ்வொரு மௌனம். குடும்ப உறவுகளிலிருந்து விலகியிருக்கும் ஒருவன் ஒவ்வொரு சிக்கலையும் ‘லாஜிக்கலாக’ கையாண்டு மனிதர்களிடம் தோற்றுப்போவதை படம் நெடுக நமக்கு உரைக்க வைக்கிறார். அவரின் அக்காவாக முதிர்ச்சியான பாத்திரத்தில் நடித்திருந்த பூஜாவும், காதலியாக நடித்திருந்த ஷ்ரேயா சௌத்ரியும் கச்சிதம். 

அவினாஷ் திவாரியின் அக்காவாக நடித்திருக்கும் பூஜா சரூப்புக்கு முதிர்ச்சியான கதாபாத்திரம். தந்தை, மகன் இருவரையும் ஒன்றாகத் தங்கவைக்கும் காட்சியில் தன்னை அளந்து வெளிப்படுத்தியிருப்பார்.

The Mehta Boys படக்குழு

போமன் இரானி மற்றும் அலெக்சாண்டர் டினெலாரிஸ் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். ரயில் பெட்டி போல ஒன்றுடன் ஒன்று தொட்டுத் தொடரும் காட்சிகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. புதுமையான கதை சொல்லல் இருந்தாலும், கார்பரேட் அலுவலகத்தின் டெம்ப்ளேட் காட்சிகள் பழக்கப்பட்டவையாக இருந்தன. ஒருமணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் படத்தில் பெரும்பான்மை அமேயின் வீட்டிலும் வெளியிடங்களிலுமே நடப்பதனால் படத்தின் சுவாரஸ்யத்தை அது பாதிப்பதில்லை.

அன்பை வெளிப்படுத்த எப்போதும் ஒரு கொடுக்கல் வாங்கல் அவசியம். இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையிடம் தன்னால் வாங்கிக்கொள்ள என்ன இருக்கிறது என முன் தீர்மானத்துடன் அணுகும் மகனும், இத்தனை நாள் நான் கொடுத்து வளர்த்தவனிடம் கை நீட்டி ஒன்றைப் பெற்றுக்கொள்வதா? என பிடிவாதம் பிடிக்கும் தந்தையும் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். அவற்றில் மிக எளிதாகத் தவறவிட்டது பரஸ்பரம் பாசாங்குகளுடன் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய ‘அன்பை’ என்பதை முறைத்தபடியே முத்தமிட்டுச் சொல்கிறது இந்த படம். 

இந்தியில் ஒரு மெய்யழகன், தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.