வாஷிங்டன் டி.சி.,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷிய அதிபர் புதினுடன் பேசியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
2022-ம் ஆண்டில் நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தேன் என்றால், 3 ஆண்டு கால போரானது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். டிரம்ப்பிடம் நியூயார்க் போஸ்ட் நிருபர், எத்தனை முறை நீங்களும், புதினும் பேசியுள்ளீர்கள் என கேட்டதற்கு, அதனை நான் சொல்லாமல் இருப்பது நல்லது என கூறினார்.
ஆனால், போர்க்களத்தில் உயிரிழப்பு பற்றி புதின் கவனத்தில் கொள்வார் என நான் நம்புகிறேன் என்றார். மக்கள் மரணம் அடைவது நிறுத்தப்பட வேண்டும். அதனை பார்க்க அவர் விரும்புகிறார். மரணம் அடைந்த அனைவரும், இளமையான மற்றும் அழகான மக்கள். அவர்கள் உங்களுடைய குழந்தைகளை போன்றவர்கள். 20 லட்சம் பேர். எந்தவித காரணமும் இன்றி உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார்.
நான், ஜோ பைடனை போல அல்லாமல், புதினுடன் எப்போதும் நல்ல முறையிலான நட்புறவை வைத்திருக்கிறேன். பைடன் நம்முடைய நாட்டுக்கு முற்றிலும் குழப்பம் ஏற்படுத்த கூடியவர் என்று கூறிய டிரம்ப், இந்த நெருக்கடிக்கு முடிவு ஏற்படுத்த வலுவான ஒரு திட்டம் தன்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் மக்கள் பலியாகி கொண்டிருக்கின்றனர். உக்ரைனில் நடந்து வரும் போரானது மிக மோசம் வாய்ந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.