ஹைதராபாத்: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.
அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தார். கடந்த ஜூலை 17-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில், “நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது. இது தரமற்ற நெய்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முந்தைய ஆட்சியின் கொள்முதல் டெண்டரை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. கடந்த ஆகஸ்ட் முதல் அனைத்து பிரசாதங்களுக்கும் கர்நாடக அரசின் ‘நந்தினி’ நெய் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஜெகன் ஆட்சியில் திருப்பதி பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட தாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழ (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ. 5 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. அதில் சிபிஐ தரப்பில் 2 அதிகாரிகள் ஆந்திர காவல்துறை அதிகாரிகள் 2 பேர் உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர்
இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொம்மில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் சிஇஓ வினய் காந்த் சவுடா, திண்டுக்கல் தனியார் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 4 பேரிடமும் 3 நாட்களாகவே சிபிஐ விசாரணை நடத்திவந்ததாகவும், விசாரணைக்கு இவர்கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெலுங்கு தேச கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.