சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கரில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சத்தீஸ்கர் காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி), சிறப்பு அதிரடி படை (எஸ்டிஎப்), மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 287 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 1,000 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 837 தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்.
இந்த சூழலில் சத்தீஸ்கரின் பிஜாபூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை டிஆர்ஜி, எஸ்டிஎப், சிஆர்பிஎப் படை வீரர்கள் நேற்று முன்தினம் சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 31 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிஆர்ஜி, எஸ்டிஎப் படைகளை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சத்தீஸ்கர் காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது: மகாராஷ்டிர எல்லையில் அமைந்துள்ள பிஜாப்பூர் மவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்களை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் இதுவரை 31 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. என்கவுன்ட்டரின்போது இரு வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட 3-வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இவ்வாறு ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
மாநில காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சத்தீஸ்கரில் பிப். 17, 20, 23 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை கொடூரமாக கொலை செய்து வருகின்றனர்.
இதை தடுக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த அனைத்து மலைப்பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 4-ம் தேதி அபுஜாமத் வனப்பகுதியில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஜனவரி 9-ம் தேதி சுக்மா பகுதியில் 3 தீவிரவாதிகள், கடந்த ஜனவரி 12-ம் தேதி பிஜாபூர் பகுதியில் 5 தீவிரவாதிகள், கடந்த ஜனவரி 16-ம் தேதி கங்கர் புஜாரி பகுதியில் 18 தீவிரவாதிகள், கடந்த ஜனவரி 20-ம் தேதி 16 தீவிரவாதிகள், கடந்த 2-ம் தேதி பிஜாபூர் பகுதியில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்போது பிஜாபூரில் இதுவரை 31 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை உயரக்கூடும். இவ்வாறு மாநில காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சத்தீஸ்கரின் பிஜாபூர் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மிகப்பெரிய என்கவுன்ட்டரை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள். இதன்மூலம் தீவிரவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி சத்தீஸ்கரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை அழிக்க உறுதி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தீவிரவாதம் புற்றுநோய் போன்றது. அதை வேரறுப்போம். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.