தலைமைச் செயலகத்தில் நடந்த, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் தொல். திருமாவளவன்.
தொடர்ந்து முலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், 4 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். ஈரோடு சட்டமன்ற தேர்தல் வெற்றி மற்றும் பெரியார் அரசியல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் திருமாவளவன்.
“ஈரோடு சட்டமன்றத்தில் அதிமுக வாக்காளர்கள் கூட அந்த அரசியலுக்கு எதிராக நின்றிருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவுபடுத்துகின்றன.” எனப் பேசியுள்ளார்.
தொடர்ந்து, “ஈரோட்டு சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள், இந்த மண் பெரியாரின் சமூகநீதி அரசியலுக்கான தேசம் என்பதை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
பெரியார் தமிழ் மக்களுக்குக்கு எதிரானவர் எனத் திருபு வாதம் செய்ய சங் பரிவார்கள் முயற்சி செய்தனர். இது அவர்கள் நீண்டகாலமாக செய்துவரும் முயற்சியாகும். பெரியார் என்ற அடையாளத்தை சிதைத்துவிட்டால், திராவிட அரசியலின் வேரை வெட்டி வீழ்த்த முடியும் என சங்கபரிவார் அமைப்புகள் பெரியார் காலத்திலிருந்தே முயற்சித்து வருகின்றனர். அவ்வப்போது தமிழ் சமூகத்திலிருந்தே அவர்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்து, பெரியாருக்கு எதிராக நிறுத்தியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு சந்தர்பத்திலும் அவர்கள் மூக்குடைபட்டு, அவமானப்பட்டார்கள் தவிர அவர்களால் பெரியாரை வெல்லமுடியவில்லை. பெரியார் பேசிய அரசியல் பெரியாருக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வேரூன்றியது என்பதை சங் பரிவார்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.
பண்டிதர் அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் காலத்தில் இருந்தே ஆரியத்துக்கு எதிரான திராவிட அரசியல் வலுவாக பேசப்பட்டிருக்கிறது. அந்த அரசியலின் தொடர்ச்சியாகத்தான் பெரியார் இந்த மண்ணில் விஸ்வரூபம் எடுத்தார்.
பெரியாரை வீழ்த்த அவர்கள் எடுத்த சதி முயற்சிகள் ஒவ்வொருமுறையும் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலிலும் அந்த சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
“ஆண்ட கட்சி, வலுவான எதிர்கட்சி அதிமுக அந்த தொகுதியில் போட்டியிடாமல் பின் வாங்கியதற்கு சங் பரிவார்களின் சூழ்ச்சிதான் காரணம் என்பதை அறிய முடிந்தது. அவர்கள் எல்லோரும் கூட்டு சேர்ந்து திமுக-வா, திமுகவை எதிர்த்து நின்ற அரசியல் கட்சியா (நாம் தமிழர்) என்ற விவாதத்தை நகர்த்தினார்கள். ஆனால் அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
அவர்கள் செய்த மறைமுக கூட்டணி அம்பலப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் மூக்குடைபட்டிருக்கிறார்கள். ஈரோடு சட்டமன்றத்தில் அதிமுக வாக்காளர்கள் கூட அந்த அரசியலுக்கு எதிராக நின்றிருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவுபடுத்துகின்றன.
அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் ஈரோடு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. பெரியாரின் அரசியலை இந்த மண்ணில் எவராலும் அசைத்துப்பார்க்க முடியாது. அது சமூக நீதி அரசியல், புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல், பண்டிதர் அயோத்திதாசரின் அரசியல். ஆரியத்துக்கு, சங் பரிவார்களின் கருத்தியலுக்கு நேர் எதிரான அரசியல் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.
மேலும் முதலமைச்சரிடம் வைத்த நான்கு முக்கிய கோரிக்கைகளையும் விளக்கினார்.