யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர்கள் ரன்வீர் அலஹாபாடியா , சமய் ரெய்னா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர் சமய் ரெய்னா நடத்தும் பிரபலமான நிகழ்ச்சி ‘இண்டியா’ஸ் காட் லேடன்ட் (India’s Got Latent). இதை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபல யூடியூபரான ரன்வீர் அலஹாபாடியா அடித்த படு ஆபாசமான கமென்ட் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளரிடம் ’உங்கள் பெற்றோர் நெருக்கமாக இருப்பதை உங்கள் வாழ்நாள் முழுவதும் பார்த்து ரசிப்பீர்களா?’ என்கிற வகையில் மிகவும் ஆபாசமான கேள்வியை நகைச்சுவை என்ற பெயரில் கேட்டு சிரிக்கிறார் ரன்வீர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் சமய் ரெய்னா மீதும், ஆபாசமாக பேசிய ரன்வீர் அலஹாபாடியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் சமய் ரெய்னா, ரன்வீர் உள்ளிட்ட ஐந்து இன்ஃப்ளூயன்சர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து ‘பீர்பைசப்ஸ்’ யூடியூப் சேனல் நிறுவனரான ரன்வீர் அலஹாபாடியா தன்னுடைய கருத்து மிகவும் பொருத்தமற்றது என்றும், நடந்த சம்பவத்துக்கு தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ரன்வீர் அலஹாபாடியா? – மும்பையைச் சேர்ந்த இவர் பீர்பைசப்ஸ் என்ற தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். இந்த சேனலுடன் சேர்த்து இவருக்கு மொத்தம் 12 சேனல்கள் உள்ளன. இவற்றில் பதிவிடப்படும் வீடியோக்கள் பில்லியன் கணக்கில் பார்வைகளை பெறுகின்றன. மேலும் இவரது ‘தி ரன்வீர் ஷோ’ நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்களை பேட்டி எடுத்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு இவருக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். அந்த மேடையில் தூக்கமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி அலஹாபாடியாவை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.