லாகூர்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து நாளை நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.