கட்டாக்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார், வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். நேரம் செல்ல செல்ல சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாட இந்திய அணியின் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது. சுப்மன் கில்லும் அரைசதம் அடித்தார்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சுப்மன் கில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித்துடன் கை கோர்த்த ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாட இந்திய அணி சிக்கலின்றி வெற்றியை நோக்கி பயணித்தது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 76 பந்துகளில் சதம் விளாசினார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே 119 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் 44 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதி கட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்தினர்.
கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 308 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் படேல் 41 ரன்களுடனும், ஜடேஜா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.