GOAT Bumrah: `பேட்டர்களின் கொடுங்கனவு அவன்; தனியொரு நம்பிக்கை’ – எப்படி சாதித்தார் பும்ரா? | Ep 1

‘சூப்பர் ஹீரோ பாணி!’

சூப்பர் ஹீரோ படங்களின் உயிர்நாடி என்னவென்று யோசித்திருக்கிறீர்களா? மக்கள் அவதிப்பட்டு துன்புற்று கையறு நிலையில் நிற்கும் போது மீட்பராக வந்து தன்னுடைய அத்தனை வித்தைகளையும் நாயகன் களத்தில் இறக்க வேண்டும். அதன்வழி தன் ஊரையோ நாட்டையோ பெரும் சிக்கலிலிருந்து எந்த சேதாரமும் இல்லாமல் மீட்க வேண்டும். இதை கச்சிதமாக செய்து முடிப்பவர்கள்தான் ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், பேட் மேன் போன்றோர்.

பும்ரா

கிரிக்கெட் ரசிகர்களின் பாணியில் சொல்ல வேண்டுமெனில் இதையெல்லாம் செய்பவரின் பெயர் பும்ரா. யோசித்துப் பாருங்களேன். ஒரு சூப்பர் ஹீரோ எப்படி பிரச்னையில் சிக்கியிருக்கும் தன்னுடைய நகரத்தை சாகசங்களை செய்து மீட்பானோ, அப்படித்தான் பும்ராவும் இந்திய அணியை ஒவ்வொரு முறையும் மீட்டு வருகிறார். பும்ரா, இந்தப் பெயர் தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் ஒற்றை நம்பிக்கை. கோடானு கோடி இந்திய இதயங்களின் ஆர்ப்பரிப்பு கூவல்.

பும்ரா

‘சச்சின்…தோனி…பும்ரா..’

இன்றைக்கு ‘பூமர் அங்கிள்கள்’ கேட்டகரியில் இருக்கும் 80’ஸ் கிட்ஸ்கள் கிரிக்கெட் பார்த்த காலத்தில் கபில்தேவின் மீது ஒருவித முரட்டு நம்பிக்கை இருந்திருக்கும். அத்தனை பேரும் காலியானாலும் ஒற்றை ஆளாக சாகசமான ஆட்டத்தை ஆடி அணியை வெல்ல வைப்பார் என கபில்தேவை உச்சி முகர்ந்து ஒரு தலைமுறையின் நாயகன் ஆக்கினார்கள். 1983 உலகக்கோப்பையே கபில்தேவ் என்கிற நாயகனின் மீதிருந்த அசாத்திய நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான்.

90 களில் இந்த இடத்தை சச்சின் பிடித்துக் கொண்டார். ‘எதுவா இருந்தாலும் 24 மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும்!’ என ஐ.சி.யூவிலிருந்து வெளிவரும் சினிமா டாக்டர்கள் பேசும் வசனத்தை போல ‘சச்சின் அவுட் ஆயிட்டா டிவி அணைச்சிட்டு போய்டுவோம்..’ என்பதும் 90ஸ் கிட்ஸ் தலைமுறையின் டெம்ப்ளேட் வசனமாக மாறிப்போனது.

‘Thala for a Reason’ என தோனி களத்தில் நிற்கும் வரைக்கும் இந்திய அணிக்கு தோல்வியே இல்லை என ஒரு கூட்டம் நம்பியதுண்டு. இவர்கள் எல்லாருமே பேட்டர்கள். கபில்தேவ் கூட ஆல்ரவுண்டர்தான்.

இங்கே பேட்டிங் ஆடக்கூடிய பந்தை எல்லைக்கோட்டை தாண்டியடிக்கும் திராணி இருக்கக்கூடிய பேட்டர்கள்தான் எப்போதுமே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். அவர்கள்தான் ஒரு தலைமுறைக்கான ‘நாயகன்’ எனும் அவதாரத்தையும் எடுத்திருக்கின்றனர்.

‘கேம் சேஞ்சர் பும்ரா!’

இங்கேதான் பும்ரா ஒரு கேம் சேஞ்சர். அவர் முழுக்க முழுக்க ஒரு பௌலர். ஒரு பௌலர் எவ்வளவு தம் கட்டி வீசி எத்தனை சிறப்பாக விக்கெட் எடுத்தாலும் அதிகபட்சமாக ஒரு ஸ்டாண்டிங் ஓவேசன் கிடைக்கும். அதைத்தாண்டி ரசிகர்கள் தங்களின் மனதில் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. இந்த நிலையை மாற்றியது பும்ராதான். ‘ஏய்….இன்னும் மேட்ச் கைய விட்டு போகல, பும்ராவுக்கு இன்னும் ரெண்டு ஓவர் இருக்கு. அவன் எதாச்சு பண்ணுவான்.’ இந்த வசனத்தை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் வீட்டு வரவேற்பறையும் பல முறை கேட்டிருக்கும். சச்சினும் தோனியும் எதாவது செய்து இந்தியாவை காப்பாற்றி விடுவார்கள் என ஏக்கத்தோடு டிவியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது பும்ராவின் மீது அதே நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பும்ராவும் ஒவ்வொரு முறையும் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவரை கபில்தேவ், தோனி, சச்சின் என ஒரு ராயல் வரிசையில் அமர்த்தி அழகு பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

பும்ரா

‘ஒன் மேன் ஆர்மி!’

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் க்ளாசெனும் மில்லரும் வில்லன்களாக நின்று மிரட்டிக் கொண்டிருந்த போது டெத்தில் பும்ரா வீசிய அந்த இரண்டு ஓவர்களை மறக்க முடியுமா? தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவை இன்னும் கனவாகவே வைத்திருக்க உதவியது பும்ராவின் அந்த ஓவர்கள்தான். இந்தியா உலகக்கோப்பையை கையில் ஏந்திய போது தன்னுடைய மகனின் கழுத்தில் தான் வாங்கிய தொடர் நாயகன் விருதை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பும்ரா. சமீபத்தில் முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவுக்கு தோல்விதான். பல சீனியர் வீரர்களும் சொதப்பினார். ஆனால், பும்ரா என்ன செய்தார்? ஒரே ஒரு வீரரின் சம்பளத்தை வாங்கிக் கொண்டு அத்தனை வீரர்களுக்கும் சேர்த்து ஆடிக்கொண்டிருந்தார். அந்தத் தொடரில் மட்டும் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மற்ற இந்திய பௌலர்கள் எல்லாரும் சேர்ந்து 40 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர் என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம் பும்ராவை.

தொடரையே இழந்த போதும் அந்தத் தொடரின் நாயகன் விருதை பும்ராதான் வென்றார். ‘பும்ரா இல்லை என்பதை அறிந்து எங்களின் அணியும் 11 பேரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.’ என டிராவிஸ் ஹெட் பேசியிருந்தார். அந்த தயக்கம், அந்த பயம், அந்த பிரமிப்பு அதுதான் உலக கிரிக்கெட்டில் பும்ராவுக்கு இருக்கும் மரியாதை.

பும்ரா ஒரு வியப்புதான். பும்ரா என்றில்லை தலை மேல் அத்தனை சுமையையும் சுமக்க தயாராக இருக்கும் அத்தனை பேருமே வியப்பைத்தான் கொடுக்கிறார்கள். ஜெயம் ரவியாக இருந்து ரவி மோகனாக மாறியிருக்கும் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தில் ஒரு வசனம் வருமே. ‘இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும்!’ அந்த வசனத்துக்கு ஏற்ற இந்திய கிரிக்கெட்டின் உழைப்பின் முகம் பும்ராதான். பார்டர் கவாஸ்கர் தொடரில் மட்டும் 151 ஓவர்களுக்கு மேல் வீசியிருக்கிறார். கேட்கும்போதே களைப்பாகியிருக்குமே!

‘தேசிய சொத்து!’

‘பும்ராவை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும்.’ எனக் கூறி பிரமிப்படைகிறார் கோலி. ‘பும்ரா மட்டும் பிராட்மேனின் காலத்தில் பௌலராக இருந்திருந்தால் பிராட்மேனின் ஆவரேஜ் கட்டாயம் அடி வாங்கியிருக்கும்.’ என திடமான நம்பிக்கையோடு சொல்கிறார் ஆடம் கில்கிறிஸ்ட். இந்திய கிரிக்கெட்டையும் இந்திய வீரர்களையும் விமர்சித்தே பழக்கப்பட்ட மைக்கேல் வாஹன், ‘பும்ராவுக்கு 10/10 மதிப்பெண் கொடுப்பேன்.’ என்கிறார். ‘பும்ரா பேட்டர்களின் கொடுங்கனவு!’ என வர்ணனை பெட்டியிலிருந்து எச்சரிக்கிறார் ரிக்கி பாண்டிங். ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உலகம் மொத்தமும் பும்ராவை ‘GOAT’ என கொண்டாடி வருகிறது.

பும்ரா

உலகின் நம்பர் 1 பௌலராக இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையாக இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பாய் மாறி நிற்கும் பும்ராவின் ஆரம்ப வாழ்க்கை எப்படியிருந்ததென தெரியுமா? கணவரை இழந்த தாயாக பும்ராவை வளர்க்க அவரின் தாய் தல்ஜீத் பும்ரா பட்ட கஷ்டங்களை பற்றி அறிவீர்களா? தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தே பந்துவீச்சை கற்றுக்கொண்ட அந்த குட்டி பும்ரா, இன்றைக்கு அடைந்திருக்கும் உச்சத்துக்கு பின்னால் இருக்கும் உழைப்பின் வலியை உணர்ந்திருக்கிறீர்களா? வாருங்கள்…பும்ராவின் வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை மெதுவாக புரட்ட தொடங்குவோம்.!

(வேகம்… வீசும்..!)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.