அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி புதிய எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்தனர். அப்போது மக்களுக்காக பணியாற்றுமாறு கேஜ்ரிவால் அறுவுறுத்தினார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 70-ல் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது. இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஆதிஷி சிங் உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 22 எம்எல்ஏ-க்கள் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் ஆதிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் புதிய எம்எல்ஏ-க்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். அதேபோல தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பாஜகவை வலியுறுத்துவோம். குறிப்பாக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி, வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வோம்.

அதேநேரம், கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி செயல்படுத்தி வந்த பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்வோம். வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.