டெல்லியில் பாஜக சார்பில் புதிய முதல்வராக பதவியேற்பவர், முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பயன்படுத்திய ஷீஷ் மகாலில் தங்க மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 70 உறுப்பினர்களை டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உள்ளது.
முன்னதாக ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான மதுபான ஊழல் வழக்குகள் மட்டுமின்றி, கேஜ்ரிவால் தனது அரசு வீட்டை பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்ததையும் பாஜக தேர்தல் பிரச்சினையாக்கியாக்கியது.
டெல்லியில் 40 சதவீத மக்கள் குடிசைகளில் வாழும் நிலையில் கேஜ்ரிவால் சொகுசு மாளிகையில் ஆடம்பரமாக வாழ்கிறார், வீட்டை அலங்கரிப்பதில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்துள்ளார் என பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு ஷீஷ் மகால் என்ற வார்த்தையை படுத்தியது.
இந்நிலையில் டெல்லியின் புதிய முதல்வராக பாஜக சார்பில் பதவியேற்பவர் கேஜ்ரிவால் பயன்படுத்திய ஷீஷ் மகாலை பயன்படுத்த மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி முதல்வர் பதவிக்கான தனது தேர்வை பாஜக இன்னும் அறிவிக்காத நிலையில் அப்பதவிக்கான போட்டியில் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா (47) முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கு டெல்லி எம்.பி.யாக 2 முறை பதவி வகித்த பர்வேஷ் வர்மாவுக்கு கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கேஜ்ரிவால் தொடர்ந்து 3 முறை வென்ற புதுடெல்லி தொகுதியில் அவரை எதிர்த்து வர்மா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் டெல்லி முன்னாள் முதல்வர் மறைந்த சாகிப் சிங் வர்மாவின் மகன் ஆவார்.
வர்மா தவிர, மால்வியா நகர் தொகுதியில் ஆம் ஆத்மியின் சோம்நாத் பாரதி தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெறுவதை தடுத்த சதீஷ் உபாத்யாய, ஜானக்புரி தொகுதியின் புதிய எம்எல்ஏ ஆசீஷ் சூட், ரோஹ்தாஸ் நகர் தொகுதியின் 3-வது முறை எம்எல்ஏ ஜிதேந்திர மகாஜன், டெல்லி பாஜக தலைவரும் ரோஹிணி தொகுதியின் மூன்றாவது முறை எம்எல்ஏவுமான விஜேந்தர் குப்தா ஆகியோரும் டெல்லி முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.