டெல்லி சட்டப் பேரவைக்குத் தேர்வானவர்களில் 31 எம்எல்ஏக்கள் மீது குற்றப்பின்னணி வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் டெல்லி சட்டப் பேரவைக்குத் தேர்வானவர்களில் மொத்தம் 31 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வெற்றி பெற்றவர்களில் 43 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 2025-ல் தேர்வானவர்களில் 17 புதிய எம்எல்ஏக்கள் மீது கடுமையான பிரிவில் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு போன்றவை அவர்கள் மீது பதிவாகியுள்ளன.
பாஜக சார்பில் தேர்வாகியுள்ள 48 பேரில் 16 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி சார்பில் தேர்வான 22 பேரில் 15 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
7 எம்எல்ஏக்கள் மீதும், 10 எம்எல்ஏக்கள் மீதும் கடும் குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. புதிதாக தேர்வான 70 எம்எல்ஏக்களுக்கு மொத்தமாக ரூ.1,542 கோடி சொத்து உள்ளது. எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22.04 கோடியாக உள்ளது.
பாஜக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.28.59 கோடியாகவும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.74 கோடியாகவும் உள்ளது. 3 பாஜக எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.115 கோடி முதல் ரூ.259 கோடியாக உளளது. அதே நேரத்தில் 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ கர்னைல் சிங் அதிகபட்சமாக ரூ.259.67 கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். அதற்கு அடுத்தபடியாக பாஜக எம்எல்ஏக்கள் மன்ஜிந்தர் சிங் சிர்சாவுக்கு ரூ.248.85 கோடியும், வர்மாவுக்கு ரூ.115.63 கோடியும் சொத்துகள் உள்ளன.
தேர்வான புதிய எம்எல்ஏக்களில் 64 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 33 சதவீதம் பேர் 5 முதல் 12-ம் வகுப்புப் படித்தவர்களாகவும் உள்ளனர். தேர்வான 70 பேரில் 5 பேர் மட்டுமே பெண் எம்எல்ஏக்கள் ஆவர். கடந்த 2020-ல் 8 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் ஏடிஆர் தெரிவித்துள்ளது.