திருப்பரங்குன்றம்: தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மலையை சுற்றிலும் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் 144 தடை உத்தரவு போட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில் பழங்காநத்தம் பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு மணி நேரம் மட்டும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும் நிலையில் மலையிலுள்ள காசி விசுவநாதர் கோயில், தர்காவுக்கு செல்லும் வழிகளில் சோதனைக்கு பிறகே வழிப்பாடுக்கு அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மேலும், ‘தைப்பூச தினத்தில் திருப்பரங்குன்றத்தில் குடும்பத்தினருடன் கூடுவோம்’ என்ற பதிவு ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலால் திருப்பரங்குன்றம் பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
காசி விசுவநாதர் கோயில், தர்காவுக்கு செல்லும் நபர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டன. மலை முழுவதும் கண்காணிக்கப்பட்டது. முருகன் கோயில், மலையை சுற்றிலும் சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் பகுதியில் மட்டுமே சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் இருந்தனர். காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர்கள் காலை முதலே திருப்பரங்குன்றம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை கண்காணித்தனர். பக்தர்கள் அதிகரிப்பால் முருகன் கோயிலில் மதியம் நடை சாத்தல் இன்றி தரிசனத்திற்காக தொடர்ந்து கோயில் திறந்தே இருந்தது.