நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார்’ விருதுகள் 2024 – தொழில்முனைவோரை கௌரவிக்கும் திருவிழா!

நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார்’
விருது

ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு, அங்கிருக்கும் தொழில்முனைவோரின் பங்கு அடிப்படை யானது. உலக அளவில் இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில், புதுமையான முயற்சிகள், தொடர் உழைப்பு, வித்தியாசமான சிந்தனை எனத் தொடர்ந்து தங்களுடைய தொழிலுக்காக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கும் தொழில்முனைவோரை கௌரவிக்கும் விதமாக ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார்’ விருது, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 8-ம் ஆண்டு விருது விழா 07-02-25 அன்று, சென்னை ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். அவர் பேசும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதி ஆலோசனை வழங்குவதற்காக விகடன் நிறுவனம் ‘லாபம்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதைத் தொடர்ந்து, விழாவின் சிறப்பு விருந்தினரும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டிலுள்ள டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் குறித்துச் சிறப்புரையாற்றினர். அதில், “இன்று நாம் ஏஐ காலத்தில் இருக்கிறோம். உலகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக, தகவல் தொழில்நுட்பத்துறை இருக்கிறது. நம்முடைய இலக்கான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நாம் வேகமாக எட்ட ஐடி துறையில் புத்தாக்கங்களைச் செய்ய வேண்டும். இது போன்ற மாற்றத்துக்கு அடிப்படைத் தேவை மனித வளம். அந்த வகையில் பார்த்தால், சிறந்த மனித வளம் நம்மிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஏஐ தொழில்நுட்பம் சில காலங்களுக்கு ஒரு முறை மாற்றங்களை எதிர்கொண்டு, புதுமைத் தன்மையுடன் பயணமாகிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை, தமிழக இளைஞர்கள் எப்படி எதிர்கொண்டு, கற்று, முன்னேறி வரப் போகிறார்கள் என்பது முக்கியம். `நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் மூலம் பல்வேறு பயிற்சிகள், வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி தொழில்நுட்ப மாற்றங்களைச் சமாளிக்கும் திறனை வளர்ப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்திவருகிறது” என்று உற்சாகமூட்டிப் பேசினார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விகடன் குழும மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன்…

இதையடுத்து, விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது. ‘கேரட்லேன்’ நிறுவனத்தின் நிறுவனர் மிதுன் சச்செட்டிக்கு ‘Business Outlier Award’, டெக்டான் குழுமத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.லக்‌ஷ்மணனுக்கு ‘Self Made Entrepreneur Award’ ஆகிய விருதுகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். அடுத்தபடியாக, பல தோல்விகளிலிருந்து மீண்டெழுந்த ‘அடையார் ஆனந்த பவன்’ சகோதரர்கள் கே.டி.வெங்கடேசன், கே.டி.ஸ்ரீனிவாசா ராஜா இருவருக்கும் ‘Phoenix Business Award’ விருதை போத்தீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ரமேஷ், அப்போலோ மருத்துவமனையின் சிஇஓ-வும் மெடிக்கல் சர்வீசஸ் இயக்குநருமான ஆர்.மேனன் இருவரும் இணைந்து வழங்கினர். ஈரோடு மக்களுக்காக ஆக்கபூர்வமாக யோசித்து, ஈரோடு மாவட்டத்தின் மக்களின் முன்னேற்றத்துக்காகச் சமூக அக்கறையுடன் செயல்படும் ‘ஒளிரும் ஈரோடு’ அறக்கட்டளைக்கு ‘Business Social Conscious’ விருதை பொன்ப்யூர் கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமியுடன் இணைந்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் டி.வி.எஸ் டிரஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்வரன் சிங் வழங்கினார்.

சிவராஜா ராமநாதன், அமைச்சர்
தா.மோ.அன்பரசன்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், மொய்ன் ஆகியோருக்கு ‘Startup Champion Award’ விருது வழங்கப்பட்டது. விருதை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளியும், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவின் தேசியத் தலைவர் அபிஜித் பட்டோலேவும், மண்டலத் தலைவர் முகமது இப்ராஹிமும் வழங்க அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விருதைப் பெற்றுக்கொண்டனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டிவரும் ‘ஸ்டார்ட்அப் டிஎன்’ நிறுவனத்துக்கு ‘Business Mentor Award’ (Institution) விருதை விகடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன் வழங்க, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும், ‘ஸ்டார்ட்அப் டிஎன்’ நிறுவனத்தின் சிஇஓ சிவராஜ் ராமநாதனும் பெற்றுக்கொண்டார்கள்.

நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார்’
விருது பெற்றவர்களுடன் விகடன் குழும மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன்…

தொழில்முனைவில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டும் சத்யநாராயணன் சக்ரவர்த்திக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசனும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் டி.கிருஷ்ணகுமாரும் இணைந்து ‘Business Mentor Award’ (Individual) விருதை வழங்கினர். நிகழ்வின் இறுதியாக, பிசினஸில் புதுமை செய்துவரும் நாகா லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் சௌந்தர் கண்ணனுக்கு ‘Business Innovation Award’ விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி கௌரவித்தார். தமிழகத்தின் தலைசிறந்த பல தொழிலதிபர்களின் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.