சென்னை: கோ-ஆப்டெக்ஸ் பெண் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மார்ச் 8-ம் தேதி பட்டினி போராட்டத்தை நடத்தும் சூழலை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உருவாக்க வேண்டாம் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் வெளியிட்டஅறிக்கை: எங்களின் முதல் கோரிக்கை, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் பிப்.7-ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.
எங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல், நிர்வாகம் தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஜன.31-ம் தேதி வரை தேசிய விடுமுறை நாட்கள் நீங்களாக தொடர்ந்து பணிபுரிந்து வந்துள்ளோம்.
நடப்பாண்டில் பிப்.1-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை உணவு இடைவேளையில் பணிபுரிய மறுக்கவில்லை. அதற்குரிய சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களை தவிர, மற்ற காலங்களில் வார விடுமுறை நாட்களில் கடையை அடைத்து விடுப்பு எடுக்கும் உரிமை எங்களுக்கு வேண்டும். இதில் மாற்று விடுப்பு என்ற சமரசத்துக்கு இடமில்லை.
அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் மனநிலை மாறும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக செயல்படக்கூடாது என்பதை பிப்.14-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உத்தரவிடவேண்டும்.
இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலனுக்கு எதிராக நிர்வாகம் செயல்படுமேயானால், தொழிலாளர் நலன் கருதி, பெண் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று சென்னையில் மிகப்பெரிய பட்டினி போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உருவாக்க வேண்டாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.