புதுடெல்லி: “பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், கிரிக்கெட் பேட்ஸ்மேன் போல் கவனத்தை சிதறவிடாமல் படிக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
நாடு முழுவதும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆண்டுதோறும் (பரிக் ஷா பே சர்ச்சா) பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வு பயத்தை போக்கி, அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு இந்த கலந்துரையாடலைப் பிரதமர் மோடி தொடங்கினார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் 8-வது ஆண்டாக பிரதமர் மோடி மாணவர்களுடன் டெல்லியில் உள்ள சுர்தர் நர்சரியில் நேற்று கலந்துரையாடினார். மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது படிக்கும் போது ஏற்படும் அழுத்தம், நேரத்தை திட்டமிடுவது, இலக்கு நிர்ணயிப்பது, சுயமாக ஊக்கப்படுத்திக் கொள்வது, தோல்விகளில் இருந்து முன்னேறுவது உட்பட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். மன அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்குப் பிரதமர் மோடி விளக்கினார்.
“கிரிக்கெட் விளையாட்டில் மைதானத்தில் இருப்பவர்கள் கூச்சல் போடுவார்கள், ஆதரவு கோஷம் எழுப்புவார்கள். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், பந்து மீதே பேட்ஸ்மேனின் கவனம் இருக்கும். அதேபோல் மாணவர்களும் எவ்வளவு அழுத்தம் ஏற்பட்டாலும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
மாணவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகளில் சில… எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான் உள்ளது. சிலர் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலர் வீணாக்கி விடுகின்றனர். ஒரு நாளைக்கு என்னென்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். நன்கு தெரிந்த பாடங்களிலேயே மூழ்கி கிடக்காமல், சிக்கலான பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி படியுங்கள். சிக்கலான பாடங்களை தடைகளாகப் பார்க்காமல் சவால்களாகப் பார்க்க வேண்டும்.
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது அவர்களை மாடல்களாக நடத்த கூடாது. அதற்குப் பதில் உங்கள் பிள்ளைகளின் கனவுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய பலத்தை அங்கீகரித்து வழிகாட்டுங்கள். அவர்களுடைய பயணத்துக்கு உதவி செய்யுங்கள். பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோரின் ஈகோ அல்லது சமூக அந்தஸ்து தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி மாணவர்களிடம் கூறினார்.