நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பரினிதா ஜெயின். 23 வயதான இவர், தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக இந்தூருக்கு அருகிலுள்ள விதிஷா என்ற பகுதியில் அமைந்துள்ள ரெசார்ட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து நடனம் ஆடுவதற்கு ஆசைப்பட்ட பரினிதா, அங்கு இசைக்கப்பட்ட இந்திப் பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார்.
உற்சாகமாக அவர் ஆடிக்கொண்டிருந்த போதே அவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் வரும் வழியிலேயே பரினிதா, மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எம்பிஏ பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். பரினிதாவின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதிலேயே மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.