‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிராகன்’.
இயக்குநர்களான மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ‘டிராகன்’ படத்தின் கதை குறித்தும் சிம்பு பாடிய பாடல் குறித்தும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, “என்னோட ‘ஓ மை கடவுளே’ படத்துல கணவன் – மனைவி உறவுச் சிக்கல்கள் பற்றி சொல்லியிருந்தேன். இந்தப் படத்துல ‘EX Girl Friend’-கிட்ட எப்படி பழகணும், பேசணும்னு சொல்லியிருக்கேன். ரொம்பப் பொறுப்போட இந்தப் படத்தை எடுத்திருக்கேன்.
காலேஜ்ல கெத்தாக, சேட்டைகள் பண்ணிக்கிட்டு, எல்லாரும் வியந்து பார்க்கிற மாதிரி இருந்த ஒருத்தன், வாழ்க்கையில என்ன கஷ்டத்தையெல்லாம் சந்திக்கிறான். அவனோட குடும்பம், காதல், கரியர் என்ன ஆச்சு, அதுல வர்ற பிரச்னையை எப்படி சமாளிச்சான் அப்டிங்கிறதுதான் இந்தப் படத்தோட கதை.
இந்தப் படத்துல நிறைய முத்தக் காட்சிகள் இருக்கு. கதைக்குத் தேவை என்பதால் அதை வச்சிருக்கோம். ஒரு முத்தக் காட்சியில 20 பக்கக் கதை இருக்கு. அதைத் தப்பா பார்க்க வேணாம், முகம் சுழிக்கும் வகையில் அந்தக் காட்சிகள் இருக்காது.
சிம்பு சார் கிட்ட ‘ஏண்டி விட்டு போன’ பாடலை பாடச் சொல்லிக் கேட்டோம். லவ் பிரேக் அப் பாடல நான் பாட மாட்டேன்னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் அவர்கிட்ட பேசி பண்ன வச்சோம். சாதாரணமாக பிரேக் அப் பண்ணிட்டு போற பொண்ணுக்கிட்ட ‘ஏண்டி விட்டு போன’னு கேட்போம்ல. அதுதான் அந்தப் பாட்டு” என்று ஜாலியாக ‘டிராகன்’ குறித்துப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…