Madha Gaja Raja: “நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது" – S.N. பார்வதி

ஒரு காலத்துல மாசம் முழுக்க நாடகம் இருக்கும். சினிமா வாய்ப்பு கிடைச்சா கூட ‘எப்பவாச்சும் கிடைக்கிற வாய்ப்பு’ன்னு அதைப் புறந்தள்ளிட்டு நாடகம் நடிக்கப் போயிருக்கேன். பிறகு சினிமா பக்கம் வந்த பிறகு சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் காலத்தையெல்லாம் கடந்து நாலாவது தலைமுறை நடிகர்கள் கூடவும் நடிச்சிட்டேன்.

அடுத்து சீரியலுக்கு வந்தேன். கொஞ்ச நாள் நடிச்சிட்டிருந்தப்ப கொரோனா வந்தது. ‘வயசான டிக்கெட்டுகளை எல்லாம் நடிக்கக் கூப்பிடாதீங்கப்பா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடப் போகுது’ சொல்லி கொஞ்ச நாள் நடிக்க விடாமப்  பண்ணினாங்க. இப்ப  நாடகத்துக் கூப்பிட்டாலும் என்னால போக முடியல. மூணு மணி நேரம் கேப் விடாம நடிக்கணும். சீனுக்கு சீன் காஸ்ட்யூம் மாத்தணும். எண்பதைத் தாண்டிட்டதால முடியலப்பா. கிடைக்கிற ஒண்ணு ரெண்டு சீரியல் போதும்கிற அளவுல போயிட்டிருக்கு வாழ்க்கை. ஆனா என்னைப் பொறுத்தவரை ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு காசு பணத்தைவிட அடையாளம் கண்டு, ‘நல்லா நடிக்கறீங்க’னு நாலு பேர்கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள் ரொம்பவே எனர்ஜி தரும்னு நம்பறேன்.

அந்த வகையில ரொம்ப வருஷத்துக்குப் பிறகு ‘அம்மா உங்களைப் படத்துல பார்த்தோம்’னு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களெல்லாம் வந்து சொன்னதைக் கேக்க சந்தோஷமா இருந்துச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு நான் நடிச்சு ரிலீசாகியிருக்கிற அந்தப் படம் ‘மதகஜராஜா’ என உற்சாகமாகத் தொடங்கினார் நடிகை எஸ்.என். பார்வதி.

எஸ்.என்.பார்வதி

”அந்தப் பட ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல்ல ஒரு வாரம் தங்கியிருந்து நடிச்சது இப்பவும் ஞாபகத்துல இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்ல விஷால் கூட என் அளவுக்கு ஜாலியா கேலியா யாரும் பேசியிருக்க மாட்டாங்க. இத்தனைக்கும் அந்தத் தம்பி படத்துல நான் நடிச்சது அது முதல் தடவை. ஆனா கேலி கிண்டலுக்கு அளவே இல்லாமப் போச்சு.

ஆரம்பத்துல இருந்தே நடிச்ச படங்களை கணக்கு வச்சுப் பழக்கமில்லாததால் நடிச்சதோட சரி, அந்தப்படம் வெளிவந்துச்சா, எப்படி இருக்குன்னு யார்கிட்டயும் கேக்கறதே இல்ல. யாராச்சும் வந்து சொன்னாத்தான் உண்டு. இந்தப் படத்துக்கும் வெளியாகறதுக்கு முன்னாடியே பிரஸ் மீட்லாம் நடத்தியிருக்காங்க. என்னை யாரும் கூப்பிடல. படம் வெளியாகி, நாலு பேர் வந்து என்கிட்ட சொன்ன பிறகுதான் எனக்கு நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது. விஷாலைப் பார்த்தா இது தொடர்பா சண்டை பிடிக்கணும்னுகூட நினைச்சேன். அறுபது வருஷமா நடிச்சிட்டிருக்கிறவளுக்கு பதினெட்டு வருஷம் கழிச்சு ஒரு படம் ரிலீசாகுது! இதை சோதனைனு சொல்றதா வேதனைனு சொல்றதா தெரியலை. அதனால இந்தப் படம் எனக்குமே மறக்க முடியாத ஒரு படம்தான்.

அதேநேரம் அந்த நிகழ்ச்சி தொடர்பா சில  வீடியோக்கள்ல விஷாலைப் பார்த்ததும் கண்ணுல தண்ணி வந்திடுச்சு. என்ன புள்ள, உடம்பு மேல அக்கறையா இருக்க வேண்டாமா? கடவுளே, அவருக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டேன்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.