தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தான் பட்டியல் சமூகத்தின் 7 உட்பிரிவு களை ஒருங்கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்தது.
இதன் தொடர்ச்சியாக மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றார். இதைவைத்து தேவேந்திர குல மக்களை பாஜக-வை நோக்கித் திருப்பும் வேலைகளை சிலர் முன்னெடுத்தனர்.
அதேசமயம், மாநிலத்தை ஆளும் திமுக-வும் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக அறிவித்து பணிகளை துவக்கியது. சங்கரன்கோவில் பகுதியில் மாவீரர் வெண்ணிக்காலாடிக்கு வெண்கல சிலை அமைக்கும் அறிவிப்பையும் வெளியிட்டது.
அண்மையில் நடைபெற்ற பாஜக உட்கட்சித் தேர்தல்களில் தென்காசி, நெல்லை மாவட்ட பாஜக தலைவர்களாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக-விலும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய கட்சியான அதிமுக-வும் தேசியக் கட்சியான காங்கிரசும் தங்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பதவிகளை வழங்கவில்லை என்று தேவேந்திர குல வேளாளர்கள் குறை சொல்கிறார்கள்.
2021-ல், தென் மாவட்ட தனித்தொகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், பரமக்குடி உள்ளிட்ட 10 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. இதற்கு தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் அந்தக் கட்சிக்கு உதவின. சங்கரன்கோயில் அதிமுக கோட்டையாகவே கருதப்படுகிறது. ஆனாலும் அக்கட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் சொல்லிக் கொள்ளும்படியான முக்கிய பதவிகளில் இல்லை.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2025/02/12/17393283662006.jpg)
இதுபற்றி பேசிய ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினர் சரவணன் காந்தி, “எங்களது குடும்பமே காங்கிரஸ் கட்சியில் இருக்கிறோம். ஆனால், இக்கட்சியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கே முக்கிய பதவிகளை தருகிறார்கள். எங்களுக்கு மாவட்ட தலைவர் மாதிரியான பதவிகளை தருவதில்லை.
திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மாவட்ட தலைவர் பதவியில் இருந்தார். அதன் பிறகு அதுவுமில்லை. தற்போது திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கக் கோரி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்” என்றார்.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2025/02/12/17393283842006.jpg)
இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசிய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ். பாஸ்கர் மதுரம், “எம்ஜிஆர், அதிமுக-வை உருவாக்கியபோது, அக்கட்சியின் முதல் மாநில பொருளாளராக தேவேந்திர குலத்தைச் சேர்ந்த திருச்சி சவுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டார். இப்போது அந்தக் கட்சியில் மாவட்டச் செயலாளர் அந்தஸ்தில்கூட ஒரு தேவேந்திரர் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரன் 1957 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்.
அவரது படுகொலையை பிரச்சாரம் செய்து 1962 தேர்தலில் கூடுதலாக 6 தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். 1989-ல் தனித்து நின்ற காங்கிரஸ் நெல்லை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளை வென்றது. அதற்குக் காரணம், தேவேந்திர குல மக்கள் அளித்த வாக்குகள். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த அருணாசலத்துக்கு மூன்று முறை மத்திய அமைச்சர் பதவி தந்த காங்கிரஸ், அதன் பிறகு எங்கள் சமூகத்தை புறந்தள்ளிவிட்டது. இனியும் இதே நிலை தொடருமாயின் நாங்களும் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை புறந்தள்ளி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.