ஆந்திர மாநிலத்தில் இரு கோதாவரி மாவட்டங்களிலும் சுமார் 5 லட்சம் கோழிகள் இறந்து போனதற்கு பறவை காய்ச்சலே காரணம் என மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் திடீரென 4 லட்சம் பண்ணை கோழிகள் இறந்து போயின. அதன் பிறகு மேலும் ஒரு லட்சம் பண்ணை கோழிகளும் இறந்தன. இதனால், பண்ணை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இவ்விரண்டு மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி, இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து, அவற்றை போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கை நேற்று வந்தது. அதில், பாதிக்கப்பட்ட பண்ணை கோழிகள் அனைத்தும் பறவை காய்ச்சலால் (எச்-5-என் – 1) இறந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ், வெளிநாட்டு பறவைகள் கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரியில் நம் நாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக வந்தபோது, அதன் மலக்கழிவுகள் தண்ணீரில் கலந்துள்ளன. அந்த தண்ணீர் இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பண்ணை கோழிகளுக்கு கொடுத்ததால், அவைகளுக்கு பறவை காய்ச்சல் வந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவ்விரு மாவட்டங்கள் மட்டும் பண்ணை கோழிகள் விற்பனை தடை செய்யப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது மற்ற மாவட்டங்களுக்கு பரவவில்லை என்பதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது.
கோழி முட்டையை சுமார் 100 டிகிரி வெப்பத்தில் சமைப்பதால் அவற்றால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் கால்நடை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பறவை காய்ச்சல் பீதியால் ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக இதர மாவட்டங்களில் பண்ணை கோழிக்கறி கிலோ ரூ.95-க்கு வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.