"இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது" – மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்

துபாய்,

துபாயில் நேற்று உலக அரசு உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுக்கான மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார். முன்னதாக உச்சி மாநாட்டின் வளாகத்திற்கு வருகை புரிந்த அவரை அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாட்டுக்கான மந்திரி அம்னா பிந்த் அப்துல்லா அல் தஹக் நேரில் வரவேற்றார்.

பிறகு அந்த மாநாடு வளாகத்தில் எக்ஸ்.டி.ஜி 2045 என்ற தலைப்பில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் குறித்து பேசுகையில், “வளரும் நாடுகளுக்கு 2 முக்கிய முன்னுரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிலைத்தன்மை வளர்ச்சியை ஆதரிக்க தூய தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் மற்றும் பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் திறன் மேம்பாடு தேவைப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் மிஷல் லைப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) முன்முயற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திட்டமானது தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவிலான நிலைத்தன்மையை ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. இன்று நாம் தேர்வு செய்வது அனைத்தும் சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிப்பை வழங்கும். பசுமை வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இங்கு வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக காடு வளர்ப்பு, நிலைத்தன்மை வாய்ந்த விவசாயம் மற்றும் பசுமை உள்கட்டமைப்பின் மேம்பாடு ஆகியவை அதன் ஒருங்கிணைந்த கூறுகளாகும்.

இந்தியாவை பொறுத்தவரையில் வாகன உற்பத்தி தொழில் ஒரு துறை மட்டுமல்ல அது தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது. இது 20 லட்சம் கோடி வருவாயையும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதத்தையும் அளிக்கிறது. முக்கியமாக 3 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

வாகன போக்குவரத்து துறையின் வளர்ச்சி குறித்த கணிப்புகளில் இருந்து இந்த துறையில் நிலைத்தன்மைக்கான உடனடி தேவை உள்ளது என்பது தெளிவாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போக்குவரத்து என்பது எளிதில் அணுகக்கூடிய, ஸ்மார்ட், தடையற்ற, திறன் வாய்ந்த, மின்மயமாக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள தூய எரிசக்தி மற்றும் பொறுப்புள்ள சுற்றுச்சூழல் ஆகியவைகளை உள்ளிடவைகள் அடங்கி இருக்க வேண்டும் என கருதுகிறார்” என்று அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.