இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் 4 நாள் நடைபெறும் இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவில் முதலீட்டுக்கான பல வாய்ப்புகள் உள்ளன. இதனை முதலீட்டாளர்களான நீங்கள் ஆராய்வீர்கள் என நம்புகிறேன். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என எல்லா நிபுணர்களும் கூறுகின்றனர். பாரதம் அதன் சொந்த வளர்ச்சியை மட்டுமல்ல, உலகளாவிய வளர்ச்சியையும் இயக்குகிறது.
எங்களிடம் வளங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். புதுமைகளை உருவாக்க எங்கள் மனதை ஊக்குவிக்கிறோம். மூன்றாவதாக, எங்களிடம் பொருளாதார வலிமையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் உள்ளது.
வளர்ந்த பாரதம் லட்சத்திற்கு அடுத்த 20 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் பல மைல்கற்களை கடப்போம். எரிசக்தி துறையில் 2030-க்குள் பல இலக்குகளை அடைய திட்டமிட்டுள்ளோம்.
2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட் அதிகரிக்க விரும்புகிறோம். மேலும் 5 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கை அடைய விரும்புகிறோம். இந்த இலக்குகளை இந்தியா அடையும் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்த இலக்குகள் காட்டுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா 10-வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சார உற்பத்தி திறன் 32 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று இந்தியா மூன்றாவது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடாக உள்ளது. புதைபடிவமற்ற எரிபொருள் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
பாரிஸ் பருவநிலை மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்கை எட்டிய ஜி20 நாடுகளில் முதல் நாடாக இந்தியா உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.