கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஆமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி சூப்பர் வெற்றியை பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இவ்விரு அணிகளுக்கு இதுவே கடைசி ஒரு நாள் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய முனைப்பு காட்டுவார்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை பார்மின்றி தவித்த கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் பழைய நிலைக்கு திரும்பி விட்டார். அவர் இன்னும் 13 ரன் எடுத்தால் 11 ஆயிரம் ரன்களை கடப்பார். விராட் கோலியும் ரன்மழை பொழிந்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

இங்கிலாந்து அணியில், பில் சால்ட்டும், பென் டக்கெட்டும் அதிரடியான தொடக்கம் தருகிறார்கள். தொடக்க ஆட்டத்தில் 75 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 81 ரன்னும் முதல் விக்கெட்டுக்கு திரட்டினர். ஆனால் மிடில் வரிசை தான் சீராக இல்லை. அதனால் தான் அவர்களால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியவில்லை. முதல் இரு ஆட்டத்திலும் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்து தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி இந்த முறை டாஸ் ஜெயித்தால், பந்து வீச்சுக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது.

போட்டி நடக்கும் ஆமதாபாத்தில் இந்திய அணி இதுவரை 20 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 11-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இங்கு தோற்றது நினைவிருக்கலாம். இங்கிலாந்து அணி 4 ஆட்டத்தில் ஆடி ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.