கமலுக்கு விரைவில் மாநிலங்களவை எம்.பி. பதவி?

மநீம தலைவர் கமல்ஹாசனை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக கூட்டணி சார்பில் மக்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. அவர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். கூட்டணியின்போது அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று 39 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தலுக்கு பிறகு கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. ஏதேனும் பொது பிரச்சினைகள் என்றால் அதுதொடர்பாக கருத்து தெரிவிப்பதோடு சரி. பெரிய அளவில் கட்சி பணிகளில் அவர் ஈடுபடுவது இல்லை.

இந்நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மநீம தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மநீம வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மநீம தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசனுடான திடீர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் தொடர்பான சந்திப்பா? என்று கேட்கிறீர்கள். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருக்கின்றன” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வடசென்னை தொடர்பான வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கினார். கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அவர் வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள மநீம தலைவர் கமல்ஹாசனை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீரென்று சந்தித்து பேசியது குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வுசெய்யப்பட இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.