Shubhman Gill Cricket Record | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த சுப்மன் கில், இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யாத சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். இந்த சாதனையை முதன் முதலாக செய்யும் முதல் இந்திய வீரர் என்ற பெயர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் வசம் வந்தது. இதனால், இந்திய அணியும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்தது.
இந்தியா – இங்கிலாந்து மோதல்
இந்தியா சுற்றுப் பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. சம்பிரதாயமாக மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இப்போட்டியிலாவது வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று அந்த அணியை வொயிட் வாஷ் செய்ய வேண்டும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கின.
சுப்மன் கில் சதம்
வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மாவுடன், துணைக் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினார். கடந்த போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா மீது இப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சுப்மன் கில் சூப்பரான ஆட்டத்தை ஆடினார். விராட் கோலி 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடித்து அசத்தினார் சுப்மன் கில். அவருக்கு பக்கபலமாக ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி அவரும் அரைசதம் அடித்தார். கில் 112 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 78 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் ராகுல் உள்ளிட்டோரின் சீரான பங்களிப்பால் 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்தது.
சுப்மன் கில் செய்த சாதனை
சுப்மன் கில் இப்போட்டியில் இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யாத சாதனை ஒன்றை படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி சுப்மன் கில்லுக்கு 50வது ஒருநாள் போட்டியாகும். இந்திய அணிக்காக 50 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய எந்த பிளேயரும் இதுவரை சதமடித்ததில்லை. இதற்கு முன்பு முகமது கைஃப் அதிகபட்சமாக 95 ரன்களும், கேஎல் ராகுல் 64 ரன்களும் எடுத்திருக்கின்றனர். அவர்களின் இருவரின் சாதனையையும் முறியடித்து 50வது ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய பிளேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுப்மன் கில்.