சென்னை: சென்னையில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஸூம் போன் சேவை இந்தியாவில் அறிமுகமானது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சேவை பயனர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில், சென்னையில் தற்போது ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது.
கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது.
சென்னையில் ஸூம் போன் சேவை: இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை அடிப்படையாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சிறப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஸூம் போன் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதன் சேவை சென்னையில் அறிமுகமாகி உள்ளது.
“இந்தியாவின் மிக துடிப்பான தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தக நகரங்களில் ஒன்றான சென்னையில் ஸூம் போன் சேவையை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் புது சேவை மூலம் இந்த நகரத்தின் உள்ளூர் மற்றும் உலகளாவிய அளவில் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் எங்களின் எளிமையான, செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளால் பயன் பெறுவார்கள்.
இந்திய சந்தை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே இங்கு எங்களின் ஸூம் போன் சேவை மூலம் உலக தரம் கொண்ட சேவைகளை வழங்குவோம் என்பதில் நாங்கள் உறுதியாகி உள்ளோம்.” என ஸூம் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா டெலிகாம் வட்டத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் சென்னையிலும் ஸூம் போன் சேவையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் சார்க் பிராந்தியத்தின் பொது மேலாளரும் தலைவருமான சமீர் ராஜே கூறியுள்ளார்.
கட்டண சந்தா பயனர்கள் இதனை ‘ஆட்-ஆன்’ (Add On) முறையில் பெற முடியும். ஸூம் போன் சேவையை தனியாக பெற மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா செலுத்த வேண்டும். அதன் மூலம் ஸூம் தளத்தில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வணிக நிறுவனங்களுக்கு இது பெரிதும் பயன் தரும் என தெரிகிறது. இதில் எக்ஸ்டன்ஷன் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நிறுவனத்தின் பிற ஊழியர்களுடன் எளிதில் இணையலாம். இந்த சேவையை பெற பயனர்கள் ஸூம் தளத்தில் செட்-அப் செய்ய வேண்டி உள்ளது.