சென்னை: தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்-பில் நிறைவடைந்துள்ளது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தின் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐசிஎஃப்-க்குரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப்.-பில் 12பெட்டிகள் கொண்ட புது வகை ஏசி மின்சார ரயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்படுகின்றன. மும்பை உள்ளிட்ட இடங்களில் தற்போது ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, சென்னைக்கு 2 ஏசி மின்சார ரயில் தயாரிக்கரயில்வே வாரியம் உத்தரவிட்டது. தற்போது, முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது. மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்றுகொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ். அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பும் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ரயிலாகும். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற மின்சார ரயில்களை விட இதில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.