சென்னை: தமிழகத்தில் பாஜகவின் வெற்றி தாமதப்பட்டிருக்கிறது. 2026-ல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வழங்கப்படும் என்று சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியது: மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்றனர்.
தாய்மொழியில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளதாக ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சொல்லி அரசியல் செய்யும் திமுக இதற்கு வெட்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்ல வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். தமிழக அரசு அதற்கான முயற்சியை செய்தால், நிதியை மத்திய அரசிடம் பாஜக பெற்று தரும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிக்கொண்டிருக்கிறார். அதேபோல, 2026-ல் 35 ஊழல் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். தமிழகத்தில் 2026-ல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழிசை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு சென்று, முதல்வர்களை சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் நலத்திட்டங்களை பார்த்துவிட்டு, 2026 பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள். மகாராஷ்டிராவில் தற்போது தமிழகத்தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. டெல்லியிலும் ரூ.2,500 அறிவிக்கப்பட்டு உள்ளது.
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால், பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லாவற்றையும்விட, மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் தலைவர் தமிழிசை பேசும்போது, “ஆன்மிகம்தான் தமிழகத்தை காக்கப் போகிறது. பாஜகதான் தமிழகத்தை ஆளப்போகிறது. இந்த அக்காவும், தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்ததுதான் தமிழ் என தெரிய வேண்டும். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்தது தான் தமிழ் என அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், சுமதி வெங்கடேசன், மாநில விளையாட்டு, திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.