சென்னை: தெற்கு ரயில்வேக்கான, இரண்டாவது ஏசி மின்சார ரயில் ஏப்ரலில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், தெற்கு ரயில்வேக்கான 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, தெற்கு ரயில்வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் ஆகும்.
இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பும் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சி.சி.டிவி. கேமராக்கள் இருக்கும். துருப்பிடிக்காத ஸ்டீல் பெட்டி ( ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோச்), 35 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கும் திறன் உள்பட பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒரு வாரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த ஏசி மின்சார ரயிலை காட்சிப்படுத்தல் நிகழ்வு அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள யார்டில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஏசி மின்சார ரயிலின் சிறப்பம்சங்களை ஐ.சி.எஃப் அதிகாரிகள் விவரித்தனர்.
இது குறித்து, சென்னை ஐ.சி.எஃப் துணை தலைமை இயந்திரவியல் பொறியாளர் என்.உதயகுமார் கூறியதாவது: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் அதிக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வந்தேபாரத் ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை தயாரித்து வழங்கி உள்ளோம். தற்போது, தெற்கு ரயில்வேக்காக, ஏசி மின்சார ரயில் தயாரித்து இருக்கிறோம். இந்த ரயில், மெட்ரோ ரயிலுக்கு இணையானது. இந்த ரயிலில் அதிக பேர் பயணிக்க முடியும்.
ஏற்கெனவே, மூன்று ஏசி மின்சார ரயில்கள் மும்பையில் ஓடுகின்றன. தெற்கு ரயில்வேக்காக, ஒரு ஏசி மின்சார ரயிலை தயாரித்து விட்டோம். இந்த ரயில் ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளோம்.
மற்றொரு ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்படும். இந்த மாதிரி ரயிலை தயாரிக்க 2 மாதங்கள் ஆகும். தற்போது, கிழக்கு ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில் தயாரிக்கிறோம். இதன்பிறகு, வரும் ஏப்ரலில் தெற்குரயில்வேக்கான இரண்டாவது ஏசி மின்சார ரயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏசி மின்சார ரயிலின் சிறப்பம்சங்களை ஐ.சி.எஃப் தலைமை மின்னணு பொறியாளர்கள் ஆர்.பி.பராசர், லட்சுமண சுவாமி உள்ளிட்டோர் விவரித்தனர்