புதுடெல்லி,
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான விவரங்களை வழங்குமாறு, குறிப்பாக அவருடன் படித்தவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு டெல்லி பல்கலைக்கழகம் மறுத்த நிலையில், அந்த விவரங்களை வழங்குமாறு மத்திய தகவல் கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கு கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது அவர், ‘பொதுமக்களின் நலனையும், பொது நலனையும் ஒன்றாக கருத முடியாது. பொதுமக்கள் ஏதாவது ஒன்றில் ஆர்வம் காட்டலாம். ஆனால் அது பொது நலனாக இல்லாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில் ஏதேனும் பொது நலன் உள்ளதா? என்றால், இல்லை என்பதே பதில்’ என தெரிவித்தார்.
பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை ஒரு நம்பிக்கைக்குரிய முறையில் பல்கலைக்கழகம் வைத்திருந்தது எனக்கூறிய அவர், பொது நலன் இல்லாத நிலையில் வெறும் ஆர்வத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யாருக்கும் தனிப்பட்ட தகவல்களைத்தேட உரிமை இல்லை என்றும் அவர் வாதிட்டார்.