பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடி 2 நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஏஐ உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக சுந்தர் பிச்சை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானது. பாரீஸில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்தியாவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் மற்றும் கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் எப்படி நெருக்கமாக இணைந்து பங்களிக்கக்கூடிய வழிகள் குறித்து ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் புகைப்படங்களும் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸையும் அவருடைய மனைவியும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவருமான உஷா வான்ஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த புகைப்படங்களை பிரதமர் மோடி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.