மதுரை: மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 2-வது நாளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 900-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. களத்தில் மிரட்டிய காளைகளை வீரர்கள் அடக்கி உற்சாகம் அடைந்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மதுரை கிழக்கு தொகுதி சார்பில், அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-வது நாளாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 7 மணிக்கு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. முதலில் கிராம கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு பதிவு செய்த காளைகள் அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டன. வாடிவாசலில் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பி சென்றன. மேலும், பல காளைகளின் திமிலை லாவகமாக பிடித்து அடக்கி பரிசுகளை வென்றனர். என்னை பிடித்து பார், நெருங்க முடியுமா என சில காளைகள் வீரர்களை பயமுறுத்தி மிரளவிட்டன.
தொடர்ந்து களத்தில் நின்று விளையாடிய மற்றும் வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பிய காளைகளின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், தொலைக்காட்சி, மிக்ஸி உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆணையர், திருப்பாலை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 900-க்கும் மேற்பட்ட காளைகள் வாடியில் அவிழ்க்கப்பட்டன. 402 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
காளைகள் முட்டியதில் 22 வீரர்கள், 10 காளை உரிமையாளர்கள், காவலர் ஒருவர், பார்வையாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 4 வீரர்கள், காவலர் உட்பட 8 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிப்பது போன்று கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர் பாதுகாப்பு அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்வைக் காணும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு இரண்டு நாள் நடந்தப் போட்டிகளைக் கண்டு ரசித்தனர். மதுரையிலிருந்து கீழக்கரை அரங்கிற்குச் சென்று போட்டியைப் பொதுமக்கள் பார்க்க வசதியாகப் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாலை வரையிலும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் , வீரர்களுக்கு இன்றையப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கவில்லை. தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஆலோசனையின் பேரில் மதுரை எஸ்பி அரவிந்த் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.