தற்போதைக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள தரவுகளை அழிக்கவோ அல்லது புதிய தரவுகளை சேர்க்கவோ வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) பதிவான தரவுகளை அழிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுக்களில், “இவிஎம் சாதனங்களில் பதிவான தரவுகளை சரிபார்ப்பதற்கான கொள்கையை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவிஎம்-ல் முறைகேடு செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்க, பதிவான தரவுகள் மற்றும் மைக்ரோகன்ட்ரோலரை பொறியாளர் சரிபார்க்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை என்ன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், “தற்போதைக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள தரவுகளை அழிக்கவோ அல்லது புதிய தரவுகளை சேர்க்கவோ வேண்டாம். தேர்தலுக்கு பிறகு வாக்குப்பதிவு தரவுகளை அழிக்கும் நடைமுறை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தோல்வியடைந்த வேட்பாளர் சந்தேகங்களை தெளிவுபடுத்த விரும்பினால், எந்த மோசடியும் நடக்கவில்லை என்பதை பொறியாளரை கொண்டு தெளிவுபடுத்தலாம்” என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 3-ம் தேதி தொடங்கும் வாரத்தில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.