நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஓன்றாக ஸ்மார்ட்போன் உள்ளது. போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது.
இன்றைய டிஜிட்டல் உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன என்றால் மிகை இல்லை. இந்நிலையில், ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் காலியாவதால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்க சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
ஸ்மார்போன் பேட்டரி அதிக நேரம் நீடித்து இருக்க கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
1. இரவு முழுவதும் சார்ஜ் செய்தல்
பலருக்கு தூங்கும் முன் போனை சார்ஜில் போடும் வழக்கம் உள்ளது. இரவு முழுவதும் சார்ஜ் செய்வது பேட்டரியில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, பேட்டரி திறன் பெரிதும் பாதிக்கப்படும். சார்ஜ் ஆன பிறகு அதை சார்ஜரில் அகற்ற வேண்டியது அவசியம்.
2. 100% பேட்டரி சார்ஜ்
போனை 100% வரை போனை சார்ஜ் செய்க் கூடாது. பேட்டரி 85% முதல் 90% ஆகும் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 100% பேட்டரி சார்ஜ் செய்வது பேட்டரி செல்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் திறனை பாதிக்கிறது. இதனால் பேட்டரி சீக்கிரம் காலியாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
3. அதிக திரையின் பிரகாசம்
போன் திரையின் பிரகாசத்தை அதிக அளவில் வைப்பது பேட்டரியை காலி செய்வதோடு மட்டுமல்லாமல், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்தையும் அதிகரிக்கிறது. தேவைக்கு ஏற்ப திரையின் பிரகாசம் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
4. பின்னணியின் இயங்கும் செயலிகள்
போனில், நாம் பயன்படுத்தும் பல செயலிகள் பின்னணியில் இயங்குவதை நிறுத்தவும். இந்த செயலிகள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், பின்னணியில் இயங்குவது பேட்டரி உபயோகத்தை அதிகரிக்கிறது.
5. தேவையற்ற நோட்டீஃபிகேஷன்கள்
நாம் பயன்படுத்தும் செயலிகள் அனைத்திற்க்கும் நோட்டிஃபிகேஷன்களை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதில்லை. இது பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது. அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷ்ன்களை மட்டும் ஆக்டிவேட் செய்யவும்.
6. புளூடூத் மற்றும் வைஃபை
நீங்கள் புளூடூத் மற்றும் வைஃபை பயன்படுத்தாதபோது, அவற்றை அணைக்கவும். பேட்டரி பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்கின்றன. இதனால் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும்.
7. அதிக வெப்பம்
நேரடி சூரிய ஒளியில் அல்லது சூடான இடத்தில் ஸ்மார்போன்களை வைப்பது பேட்டரியை சேதப்படுத்தலாம். எனவே இதனை தவிர்க்கவும்
8. டூப்ளிகேட் சார்ஜர்
பேட்டரி திறனை அதிகரிக்கவும், பேட்டரி நீண்ட நேரம் நீட்டிக்கவும், மொபைலை சார்ஜ் செய்ய எப்போதும் நிறுவனம் வழங்கும் அசல் சார்ஜரை பயன்படுத்தவும். டூப்ளிகேட் சார்ஜர்கள் பேட்டரியை சேதப்படுத்தி அதன் திறனை பாதிக்கும்.