அகமதாபாத் மைதானத்தில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்

அகமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது.

சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) சதம் அடித்த 5வது வீரர் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

சுப்மன் கில் ஏற்கனவே இந்த மைதானத்தில் டெஸ்ட் மற்றும் டி20 சதங்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்றைய (ஒருநாள் போட்டி) ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ஐ.பி.எல் தொடரிலும் அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த வீரர்கள்:

பாப் டு பிளெஸ்சிஸ் – வாண்டரர்ஸ், ஜோகன்னஸ்பர்க்.

டேவிட் வார்னர் – அடிலெய்டு, ஓவல்.

பாபர் அசாம் – தேசிய மைதானம், கராச்சி.

குயிண்டன் டி காக் – சூப்பர்ஸ்போர்ட் பார்க், சென்சூரியன்.

சுப்மன் கில் – நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.