வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். பல்வேறு பதவிகளுக்கும் முக்கிய நபர்களை நியமனம் செய்து வருகிறார்.
இதன்படி, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநராக துளசி கப்பார்டு அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், முறைப்படி அவர் பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்டுக்கு, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட செய்தியில், தேசிய நுண்ணறிவு பிரிவின் இயக்குநராக துளசி கப்பார்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறார் என கூறினார். அவர் நம்முடன் பணியில் இணைவார். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெறும் என்றார்.
இதற்கான ஒப்புதலை குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். டிரம்பின் இந்த நியமனத்திற்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனாதிபதி டிரம்பின் நியமனம் பற்றிய அறிவிப்புக்கு பின்னர், மந்திரி சபையும் அதனை விரைவாக உறுதி செய்து வருகிறது என்றார்.
கடந்த 20-ந்தேதியில் இருந்து, அரசின் முக்கிய பொறுப்புகளில் டிரம்ப் அடுத்தடுத்து நியமித்து வரும் 14-வது நபர் கப்பார்டு ஆவார்.