வாஷிங்டன்,
3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவுக்கு நேற்று புறப்பட்டார். தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாஷிங்டன் டிசி நகருக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்க திரண்டு இருந்தனர்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்து பேசுகிறார். அமெரிக்க அதிபராக டிரம்பின் 2-வது பதவிக்காலத்தில் பிரதமர் மோடி அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.இரு தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய நட்பு நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக தனது அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘ அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெற்ற வெற்றிகளை தொடர இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
அத்துடன் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் உயர்த்தவும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கவும் இது உதவும்’ என கூறியிருந்தார். தனது நண்பர் டிரம்புடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியிருந்த மோடி, இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு விரிவான கூட்டுறவை உருவாக்க அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை தான் மிகவும் அன்புடன் நினைவில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.