இசை வெளியீட்டு உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி இளையராஜா சாட்சியம் அளித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின் மனைவி ஜீவா (கடந்த 2011-ல் காலமாகிவிட்டார்) நடத்தும் இசை நிறுவனத்திடம் இருந்து எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, எங்களது அனுமதியின்றி அந்த பாடல்களை யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், ‘கடந்த 1997-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தபோது, யூ-டியூப், சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆடியோ ரிலீஸ் தொடர்பாக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது’ என்று தெரிவி்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.இளங்கோ முன்பு இளையராஜா நேற்று காலை 11.30 மணிக்கு ஆஜரானார். அவரது வழக்கறிஞர்கள் ஏ.சரவணன், கே.தியாகராஜன் ஆகியோரும் உடன் வந்தனர்.
சாட்சி கூண்டில் ஏறி நின்ற இளையராஜாவிடம், மியூசிக் மாஸ்டர் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் 25-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி குறுக்கு விசாரணை நடத்தினார். ‘‘எந்த வயதில், எந்த ஆண்டு சென்னைக்கு வந்தீர்கள்? இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு என்னவாக இருந்தீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘சென்னைக்கு 1968-ம் ஆண்டு வந்தேன். அதற்கு முன்பு என்னவாக இருந்தேன் என தெரியாது’’ என இளையராஜா கூறினார்.
‘‘கார், பங்களா போன்றவற்றை எந்த ஆண்டு வாங்கினீர்கள்? குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீச் ரிசார்ட் எப்போது வாங்கினீர்கள்?’’ என்று கேட்டதற்கு, வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக கூறி இளையராஜாவின் வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
பிறகு, இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களின் உரிமை, இதற்காக தயாரிப்பாளர்களிடம் வாங்கிய தொகை, இளையராஜாவின் தற்போதைய சொத்து மதிப்பு, அவரது மனைவி்யின் சொத்துகள் குறித்து வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு இளையராஜா, ‘‘இசையமைப்பது மட்டுமே எனது தொழில். இசை மீதான ஆர்வத்தால், ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை. அதனால், எந்த பொருட்களை எப்போது வாங்கினேன் என்பது தெரியாது. திரைப்படங்களில் இசையமைக்கும்போது, இயக்குநர்களுடன் மட்டுமே உரையாடல்கள் இருக்கும். தயாரிப்பாளர்களுடன் எந்த சம்பந்தமும் இருந்தது இல்லை. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை. எனக்கு சொந்தமாக அலுவலகம், ஸ்டுடியோகூட இல்லை. பெயர், புகழ், செல்வம் என அனைத்தும் சினிமா தந்தது’’ என்று தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சாட்சியம் அளித்த இளையராஜா, பகல் 1.30 மணி்க்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.