‘‘இலவச ரேஷன் மற்றும் உதவித் தொகையால் மக்கள் வேலைக்கு செல்ல தயார் இல்லை. இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வீடுகள் இல்லாமல் பலர் பிளாட்பாரங்களில் தங்கியுள்ளனர். அவர்களின் இருப்பிடம் உரிமை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.காவை மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, ‘‘இப்பிரச்சினைக்கு தீர்வு காண நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்தி கொண்டிருக்கிறது’’ என்றார்.
நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை உறுதிசெய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் கூறியதாவது:
துரஅதிர்ஷ்டவசமாக மக்களுக்கு அளிக்கப்படும் இலவசங்களால், அவர்கள் வேலைக்கு செல்ல தயார் இல்லை. அவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. மேலும், எந்த வேலையும் செய்யாமல் பணமும் கிடைக்கிறது. இது நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்காது.
மக்கள் மீதான அரசின் அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை வழங்க அனுமதித்து, அவர்களை சமூகத்தில் ஒன்றாக கலக்கச் செய்தால் அதைவிட சிறப்பாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.