சென்னை: உடல் நலக்குறைவால் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு சக போலீஸார் ரூ.14 லட்சம் நிதி திரட்டினர். அதனுடன் ரூ.1 லட்சம் சேர்த்து ரூ.15 லட்சமாக சென்னை காவல் ஆணையர் அருண் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபு என்பவர் பணியில் இருந்த போது உடல் நலக்குறைவால் கடந்தாண்டு கடந்த செப்.11-ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி மற்றும் சாய்சந்தீப் (23), ஶ்ரீராகவ் (19), சாய்சவரேஷ் (14) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். உதவி ஆய்வாளர் கோபு இறந்ததால் அவரது குடும்பம் சிரமத்துக்கு உள்ளானது.
இதையடுத்து, கோபு குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு, மற்றும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் அவருடன் பணியில் சேர்ந்த 1997 (IInd) பேட்சின், சக காவலர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ் அப் குழு மூலம் மொத்தம் ரூ.14 லட்சம் நிதி வசூலித்தனர். மேலும் சென்னை காவல்துறை சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த ரூ.15 லட்சம் நிதியை கோபுவின் குடும்பத்தாரிடம் சென்னை காவல் ஆணையர் அருண் இன்று ஒப்படைத்தார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு) ராதிகா, துணை ஆணையர்கள் அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), மெகலீனா ஐடன் மற்றும் 1997 பேட்ச் போலீஸார் உடனிருந்தனர்.