பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1959-ல் வெளியான படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/veera.jpg)
பெருமைமிக்க கிளாசிக் படங்களை எல்லாம் 4கே தொழில்நுட்பத்தில் ரெடி செய்து வரும் என்.எஃப்.டி.சி. – இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் தொகுப்பிலிருந்து 35 மிமீ வெளியீட்டு அச்சிலிருந்து டிஜிட்டல் முறையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பிரின்ட் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட ஆவணக் காப்பகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை இயக்குநர் சீனுராமசாமி பகிர்ந்திருந்தார்.
மறைந்த இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளும், ஒளிப்பதிவாளருமான பி.ஆர்.விஜயலட்சுமியிடம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பற்றி அப்பா பகிர்ந்த விஷயங்கள் எதுவும் உண்டா?” எனக் கேட்டோம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/sdff05e4.jpg)
”இந்தப் படம் வரும் போது நான் ரொம்ப சின்னக் குழந்தை. ஆனா, இந்தப் படம், ‘கர்ணன்’ மாதிரி சில படங்களுக்கு அப்பாவுடன் ப்ரிவியூ போய் பார்த்திருக்கேன். தவிர, அப்பா ரொம்பவே அமைதியான சுபாவம் கொண்டவர். அப்பா – மகள்னால, இன்னிக்கு தலைமுறை அப்பா -மகள்னா ஒருத்தரை ஒருத்தர் நண்பர்களாக பழகுறாங்க. ஆனா, அந்த காலகட்டம் அப்படியில்ல. அப்பா என்கிட்ட சினிமா பத்தி பேசுனது கிடையாது. இந்தப் படம் பத்தி பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம்னா, அப்பாவோட சேர்ந்து படம் பார்த்தது தான். இன்னொரு விஷயம், இந்தப் படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. அதோட விழாவுக்கு அப்பாவும் சிவாஜி அங்கிளும் சேர்ந்து போயிருந்தது ஞாபகத்துல இருக்குது. எகிப்தில் Afro-Asian திரைப்பட விழா நடந்தது. தமிழ்ல இருந்து முதல் முறையாக தேர்வான படமாக இந்தப் படம் இருந்தது. சிவாஜி அங்கிளுக்கு விருது கிடைச்சதும் ஞாபகத்துல இருக்கு” என்கிறார் விஜயலட்சுமி.
டோட்டர்டாம் திரையீடு குறித்து அறிவித்திருந்த சீனுராமசாமியிடம் பேசினோம்.
”’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் நான் பல முறை பார்த்து ரசித்த, ரசிக்கும் படம். இந்தப் படம் பற்றி, ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒண்ணு கேள்விப்பட்டிருக்கேன். எகிப்தில் நடந்த திரைப்பட விழாவில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பங்கேற்றது. அந்த நாட்டு அதிபரே நம்ம படத்தை பார்த்துட்டு மிரண்டுட்டார். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னை எல்லோரும் கொண்டாடினாங்க. நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்து கௌரவிச்சாங்க.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/150853_thumb.jpg)
சிவாஜி அவர்கள் விருதோடு, சென்னை வரும்போது, அவருக்கு எம்.ஜி.ஆர்.அவர்கள் வரவேற்பு கொடுத்திருக்கார். விமான நிலையத்திற்கு வரும் நடிகர் திலகத்தை வரவேற்க, ஒட்டு மொத்த நடிகர் சங்கதோடு போய் வரவேற்றிருக்கார். விமான நிலையத்தில் சிவாஜி கையில் இருந்த விருதை வாங்கிய எம்.ஜி.ஆர். ‘இந்த விருது சிவாஜிக்கு சொந்தமில்லை. எனக்குத்தான் சொந்தம்’ என்று புன்னகைத்தவர், ‘தம்பி வாங்கினால், அது அண்ணனுக்கு தான் சொந்தம்’ எனப் பாசத்தோடு சொல்லி பாராட்டியிருக்கார்.” என்கிறார் சீனுராமசாமி.