புதுடெல்லி: திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இஸட் பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. அவருக்கு இருக்கும் அச்சுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலாய் லாமாவின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஏற்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும், நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் தலைமையகமான தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்திலும், பிற மாநிலங்களுக்கு அவர் செல்லும் போதும், இந்தப் படை 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிஆர்பிஎஃப் சார்பில் விரிவான பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும், விரைவில் இந்த பணி முடிவடையும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.
2020-ஆம் ஆண்டில், தலாய் லாமா மற்றும் அவரது உதவியாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சீன உளவாளி சார்லி பெங், சில நபர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச காவல்துறை தலாய் லாமாவுக்கான பாதுகாப்பை அதிகரித்தது. இஸட் பிரிவில் பொதுவாக ஆயுதமேந்திய கமாண்டோக்கள் உட்பட 35 முதல் 40 பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். மூன்று ஷிப்டுகளில் அவர்கள் பாதுகாப்பை வழங்குகிறார்கள். சிஆர்பிஎஃப் தற்போது இஸட் ப்ளஸ், இஸட், ஒய், ஒய் ப்ளஸ் மற்றும் மற்றும் எக்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் பல பிரமுகர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் இத்தகைய பாதுகாப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.