தாய்மை அடையும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: விருதுநகரில் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படுமா?

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் 19 வயதுக்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, குழந்தைத் திருமணங்களின எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 150 ஆக உயர்ந்துள்ளது.

பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம் குழந்தை திருமணமாகக் கருதப்படும். சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களுக்கு உரிய இடம் அளிக்காதது, வரதட்சணை, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்சினைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை, போதிய கல்வி அறிவின்மை, வறுமை, பாலியல்ரீதியான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமை, குடும்பத்தில் பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவது, பாலின விகிதம் சமமில்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 200-300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல், மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 19 வயதுக்குள் தாய்மைப்பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 வரை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 150 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, அதில் 105 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 45 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக 405 குழந்தைகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலாசுந்தரி கூறுகையில், குழந்தைத் திருமணங்கள், குடும்ப வன்முறைகள், பெண்கள் பணியாற்றும் இடங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அச்சப்படாமல் உடனடியாக 181 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சிறை தண்டனை விதிக்கப்படும்: குழந்தைத் திருமணம் செய்து வைப்போருக்கு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006-ன்படி 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். குழந்தைத் திருமணம் செய்து கொள்பவரும் குற்றவாளியாகவே கருதப்படுவார்.

திருமணத்தை நடக்கச்செய்தவர்கள், தூண்டியவர்கள், நெறிப்படுத்தியவர்கள், நடத்தியவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான் என குழந்தைகள் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டால் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.