திமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவில் வந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுவரும் திமுக, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும், சட்டப்பேரவை தேர்தல் பணிக்காகவும் சிலமாற்றங்களை திமுக தலைமை செய்துள்ளது. அதன்படி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அடங்கிய ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டிப்பாளையம் அடங்கிய ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு என்.நல்லசிவம், பவானி, பெருந்துறை அடங்கிய ஈரோடு மத்திய மாவட்டத்துக்கு தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடம், திருப்பூர் தெற்கு அடங்கிய திருப்பூர் தெற்குக்கு க.செல்வராஜ் எம்எல்ஏ, காங்கேயம், தாராபுரம் அடங்கிய திருப்பூர் மேற்குக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அவிநாசி, திருப்பூர் வடக்கு அடங்கிய திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு என்.தினேஷ்குமார், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் அடங்கிய திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு இல.பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், செஞ்சி, மயிலம், திண்டிவனம் அடங்கிய விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி அடங்கிய விழுப்புரம் தெற்குக்கு கவுதம சிகாமணி, விழுப்புரம், வானூர் அடங்கிய விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு ஆர்.லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோரும், மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு அடங்கிய மதுரை வடக்கு மாவட்டத்துக்கு அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை வடக்கு, மத்தி, தெற்கு தொகுதிகள் அடங்கிய மதுரை மாநகர் மாவட்டத்துக்கு கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த க.அண்ணாதுரை எம்எல்ஏ. விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதில், தாமரைக்குடிக்காட்டை சேர்ந்த பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கோத்தகிரி, நெடுகுளாவைச் சேர்ந்த கே.எம்.ராஜு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் டி.பி.எம்.மைதீன்கானை விடுவித்து, அவருக்குப் பதில், மு.அப்துல் வகாப் எம்எல்ஏ பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்எல்ஏ அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இத்தகவல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்களை பொறுத்தவரை, ஏற்கெனவே அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, அப்பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்துவது மற்றும் எதிர்த்தரப்பினரை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. விழுப்புரத்திலும் அதிமுகவில் இருந்து வந்த லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த செஞ்சி மஸ்தான், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் அப்துல் வஹாப் ஆகியோருக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரியில் படுகர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கே.எம்.ராஜுவுக்கும், இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூரில் மேயர் தினேஷுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருவள்ளூரில் ரமேஷ்ராஜுக்கும், தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த பழனிவேலுவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.