“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட ‘ஈகோ’ மோதல்தான் டெல்லியில் பா.ஜ.க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?”
“டெல்லியில் 100 சதுர அடியில் 60 வாக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும், அவர்கள் ஹரியானா, உ.பி, குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதேபோல் ம.பி-யில் மக்கள் தொகைக்கு மேல் வாக்காளர்கள் உள்ளதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இப்படி அனைத்து இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பா.ஜ.க., வென்றுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து இந்தியா கூட்டணி ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்க முடியாது”
“இதன் மூலம் ‘இந்தியா’ கூட்டணியைக் கலைத்துவிடலாம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியது நடந்துவிடுமா?
“ஒவ்வொரு தலைவருக்கும் தங்களது கருத்தைச் சொல்வதற்கான சுதந்திரம் இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதன்படிதான் உமர் அப்துல்லா தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் பாசிச பா.ஜ.க-விடம் இருந்து இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காகவே ஒன்றாக இணைந்திருக்கிறோம். வலிமையாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். பா.ஜ.க-வுக்கு எதிரான சித்தாந்த போரில் அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நோக்கம். அதன்படிதான் தலைவர் ராகுல் காந்தி பயணிக்கிறார்”
“இதேபோலவே ஈரோடு கிழக்கில் மக்களுக்குப் பேட்டா கொடுத்துத்தான் தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”
“டெல்லியில் ஆளுநர், காவல்துறை என அனைத்து பலத்தையும் பா.ஜ.க வைத்திருக்கிறது. தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. மேலும் ஆளும் கட்சியைத் தொடர்ந்து குற்றம்சாட்டும் ஆளுநர் இருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் தேர்தல் தவறான நடந்ததாகச் சொல்ல முடியாது. தமிழகத்தில் தி.மு.க-வின் நான்காண்டுக்கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த மற்றொரு அங்கீகாரம்தான் ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி”
“அதேநேரத்தில் பெரியார் குறித்து விமர்சனம் செய்ததால்தான் 24,151 வாக்குகள் கிடைத்திருப்பதாகப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார்களே, நா.த.க-வினர்?”
“அ.தி.மு.க, பா.ஜ.க களத்தில் இல்லாததால், அந்த வாக்குகள் நா.த.க-வுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் பெரியாரை அவதூறு பேசினால் டெபாசிட் பெற முடியாது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்”
“திருப்பரங்குன்றத்தில் ‘மதநல்லிணக்க வழிபாடு’ நடத்துவதாக அறிவித்திருந்தீர்கள். பிறகு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என ரத்து செய்திருந்தீர்கள். ஆனால் உண்மையிலேயே நீங்கள் அனுமதி கேட்கவில்லை எனச் சொல்கிறார்களே?”
“ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மக்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஒருபோதும் அவர்களின் நோக்கம் நிறைவேறாது. கோவிலில் வழிபாடு செய்வதற்கு போலீசில் அனுமதி பெற வேண்டியதில்லை. மேலும், ‘தைப்பூசம் நடப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே, மதநல்லிணக்க வழிபாட்டைத் தள்ளி வைக்க வேண்டும்’ என, அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார். இதையடுத்துதான் தள்ளிவைத்திருக்கிறோம்”
“பாலியல் குற்றங்கள், வேங்கைவயல் விவகாரம், சிப்காட் போராட்டம் என எந்த பிரச்னைக்கும் காங்கிரஸ் ஆரப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை. கூட்டணியில் இருப்பதால் தி.மு.க-வை எதிர்க்கவே மாட்டோம் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருப்பது நியாயம் தானா?”
“வேங்கைவயலுக்கு முதலில் நான்தான் சென்றேன். அதுகுறித்து முதல்வரிடம் அறிக்கை கொடுத்திருக்கிறேன். சட்டப்பேரவையில் பேசியிருக்கிறேன். இப்படி அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் மக்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது”
“‘காங்கிரஸில் எனக்கு இருக்கும் துணிச்சல் பலருக்கு இல்லை. எனவேதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப் பயப்படுகிறார்கள்’ என, கார்த்தி சிதம்பரம் விமர்சனம் சொல்கிறாரே?”
“கார்த்தி சிதம்பரம் சொல்வது அவரது கருத்து. அதைக் காங்கிரஸ் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் தேசியக் கட்சி என்பதால், அகில இந்தியத் தலைமைதான் முடிவு எடுக்கும்”
“‘கட்டமைப்பு இல்லாததால் காமராஜர் ஆட்சியெல்லாம் அமைக்க முடியாது’ என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?”
“தமிழகத்தில் கட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. 1,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். 40% கிராமசபை கமிட்டிகள் அமைத்துவிட்டோம். திராவிட மாடல் ஆட்சியையும் காமராஜர் ஆட்சியாகவே நாங்கள் பார்க்கிறோம்”
“பிறகு எதற்கு நீங்கள் தனியாகக் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்?”
“ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. தி.மு.க-வுக்குத் திராவிட மாடல் ஆட்சி. லெனின், ஸ்டாலின், காரல் மார்க்ஸ் ஆட்சியைப் பொதுவுடைமை கட்சிகள் கொடுப்பதாகச் சொல்வார்கள். அந்தவகையில் எங்களது தத்துவம் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவது. தற்போது நாட்டில் நடக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்தியா கூட்டணியை ஒற்றுமையாகக் கொண்டு செல்ல வேண்டும். அதில் தி.மு.க சிறப்பாகச் செய்கிறது. எனவேதான் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி எனச் சொல்கிறோம்”
“சமீபத்தில் இந்தியா கூட்டணிக்கு விஜய்யை அழைத்திருந்தீர்கள். இதற்கு, ‘செல்வப்பெருந்தகை தாங்கள் தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கும் தி.மு.க கூட்டணியால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என ஒப்புக் கொள்கிறாரா?’ எனத் தமிழிசை கேள்வியெழுப்பியிருக்கிறாரே?”
“அம்பேத்கர், பெரியார், வேலுநாச்சியார், காமராஜரைத் தனது கொள்கை கோட்பாடாக எடுத்திருக்கிறார். அந்த கொள்கையும், இந்தியா கூட்டணியின் கொள்கையும் ஒன்றுதான். எனவே அவர் இருக்க வேண்டியது இந்தியா கூட்டணி என்றுதான் தெரிவித்தேன். அவரை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை”
“ஆனால், ‘விஜய்யால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியாது’ என உங்களது கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில் ஆகியோர் சொல்கிறார்களே?”
“அவரது வருகை இந்தியா கூட்டணிக்குத்தான் பலம். அதாவது ஆளும்கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள். இதனால் அ.தி.மு.க-வுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் பிரிந்து விஜய்க்குச் செல்லும். இது இந்தியா கூட்டணிக்கு நல்லதுதானே? அதேநேரத்தில் 1980-ம் ஆண்டிலேயே எம்.ஜி.ஆர்-ஐ தமிழக மக்கள் கைவிட்டுவிட்டார்கள். எனவே எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது. பொறுத்திருந்து பாருங்கள்”
“ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவர முயற்சி, நன்கொடை வசூலிப்பு என உங்களுக்கு எதிராகப் பல சர்ச்சைகள் வெடித்திருக்கிறதே?”
“உதய்பூர் பிரகடனத்தின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர்தான் பதவியிலிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர், அவர்களின் திறமைக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்படும். புரிதல் இல்லாமல் சிலர் பேசுகிறார்கள்?”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs