உதகை: நீலகிரி திமுக மாவட்ட செயலாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் கோலோச்சியது, வாரிசை வளர்த்தது, பொறுப்பு அமைச்சருடன் முரண்பட்டது என தொடர் காரணங்களால் பா.மு.முபாரக் மாற்றப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி திமுகவில் முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன் மற்றும் தேர்தல் பணிக்குழு செயலர் பா.மு.முபாரக் ஆகியோர் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் 70 வயதை தாண்டிய நிலையில், இளம் ரத்தத்தை கட்சிக்கு பாய்ச்ச வேண்டும் என கோரிக்கைகள் பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இருவரிடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையிலேயே செயல்பட்டு வந்தனர்.
கா.ராமசந்திரனை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கங்கனம் கட்டி செயல்பட்டு வந்தார். அதற்கு ஓரளவுக்கு பலனும் கிடைத்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வனத்துறை அமைச்சராக கா.ராமசந்திரன் பதவியேற்ற நிலையில், விரைவிலேயே சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனார். பின்னர் அதிலிருந்தும் விலக்கப்பட்டு, அரசு கொறடாவாக கடந்த ஆண்டு மாற்றப்பட்டார்.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முபாரக், கடந்த 11 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ராமசந்திரனுக்கு செக் வைத்து, குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடம் சீட் பெற்றார். அவரது சொந்த தொகுதியிலேயே கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த முபாரக் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று உணர்ந்தவர், தனது வாரிசான வாசிம் ராஜாவை கட்சியில் வளர்த்தெடுக்க ஆரம்பித்தார்.
இது கட்சியில் சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தனது மகனை குன்னூர் நகராட்சி உறுப்பினராக்கி, துணை தலைவராக்கினார். மேலும், திமுக விளையாட்டு அணி மாநில துணை செயலாளர் பதவியை மகனுக்கு பெற்று தந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கா.ராமசந்திரன் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டதால், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தலைமையிடம் தனக்கு உள்ள செல்வாக்கு, தன்னை விட ஜூனியரான மு.பெ.சாமிநாதனுடன் உடன்படாமல், தனித்து முபாரக் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், அதிருப்தியடைந்த அமைச்சர் சாமிநாதன் மற்றும் அரசு கொறடா கா.ராமந்திரன் தலைமையிடம் முறையிட்டு, மாற்றத்தை கொண்டு வந்ததாக கட்சியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக ஒரு சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் மாவட்ட செயலாளராக இருந்து வந்த நிலையில், நீலகிரியில் மட்டுமே பெரும்பான்மையினராக வசிக்கும் படுகரின மக்களை பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும் என கோரியும் எழுந்த வந்த நிலையில், தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த கோத்தகிரியை சேர்ந்த கே.எம்.ராஜு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கொறடா கா.ராமசந்திரனின் ஆதரவளராகவே அறியப்பட்டவர். மாவட்ட மக்களிடம் அதிகம் பரிட்சயம் இல்லாதவர் எனவும் கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாக கட்சியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்.
அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாவட்ட செயலாளர் மாற்றம் திமுகவுக்கு சாதகமா அமையுமா, பாதகமாகுமா என்பது புதிய மாவட்ட செலாளரிடம் நடவடிக்கையை பொறுத்தது என்கின்றனர் கட்சியினர்.