புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அடுத்த பகுதி மார்ச் 10-ம் தேதி தொடங்க உள்ளதால், மக்களவை அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியின் கடைசி நாளான இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், வக்பு (திருத்தம்) மசோதா 2024-இன் கூட்டுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு மத்தியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததை அடுத்து, அவர் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். மேலும், இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டத்தின் கடைசி நாள். இந்த அமர்வின்போது ஒரு நல்ல சூழலில் விவாதங்கள் நடைபெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், உங்கள் முழு ஆதரவும் எனக்குக் கிடைத்தது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 17 மணி நேரம் 23 நிமிடங்கள் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற்றன. இதில், 173 உறுப்பினர்கள் இரவு வெகுநேரம் வரை அமர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
பட்ஜெட் மீதான பொது விவாதம் 170 உறுப்பினர்களின் பங்கேற்புடன் 16 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்தது. உங்கள் ஒத்துழைப்புடன், இந்த அமர்வில் மக்களவையின் செயல்திறன் சுமார் 112% ஆக இருந்தது. இந்த வழியில் உங்கள் ஆதரவை நான் தொடர்ந்து பெறுவேன் என்று நம்புகிறேன். மக்களவை நடவடிக்கைகள் மார்ச் 10-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.